Saturday, September 21, 2024

‘என்னைப் பற்றி மோசமாக எழுதியிருந்தால்…’ – மனைவியின் சுயசரிதை புத்தகம் குறித்து டிரம்ப் பேச்சு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

Image Courtesy : AFP

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ்(59) போட்டியிடுகிறார்.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இருவரும் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் டொனல்டு டிரம்ப்பின் பிரசார பொதுக்கூட்டங்களில் அவரது மனைவி மெலனியா டிரம்ப் அதிகமாக பங்கேற்காததால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், டிரம்ப் மீதான பல்வேறு பாலியல் புகார்களால் மெலனியா அதிருப்தி அடைந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், நியூயார்க் மாகாணம் யூனியண்டேல் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டிரம்ப், தனது மனைவி எழுதிய 'மெலனியா' என்ற சுயசரிதை புத்தகம் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பரவிய வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்ந்து இது குறித்து பேசிய டிரம்ப், "மெலனியா ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். என்னைப் பற்றி நிச்சயம் அவர் நல்ல விதமாகத்தான் எழுதியிருப்பார். ஒருவேளை என்னைப் பற்றி அவர் மோசமாக எழுதியிருந்தால், அந்த புத்தகத்தை வாங்க வேண்டாம் என்று நானே சொல்லியிருப்பேன்" என்றார்.

ஸ்லோவேனியாவை பூர்வீகமாக கொண்ட மெலனியா, தனது 18-வது வயதில் மாடலிங் துறைக்குள் நுழைந்தார். தொடர்ந்து அமெரிக்காவுக்கு வந்து 1998-ல் டிரம்ப்பை சந்தித்த அவர், 2005-ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். அரசியலில் அதிக நாட்டம் இல்லாதவராக இருந்து வந்த மெலனியா, தனது கணவருக்காக 2016 அதிபர் தேர்தலில் பிரசார பணிகளிலும் ஈடுபட்டார்.

அந்த சமயத்தில், மெலனியா மாடலிங் துறையில் இருந்தபோது எடுத்துக்கொண்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தின. இருப்பினும் டிரம்ப் இது குறித்து பேசுகையில், "மெலனியா ஒரு மிகச்சிறந்த மாடலாக இருந்தவர். ஐரோப்பாவில் இதுபோன்ற புகைப்படங்கள் எல்லாம் சர்வ சாதாரணம்" என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த விவகாரம் குறித்தும் மெலனியா தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. அவரது புத்தகம் வரும் அக்டோபர் 8-ந்தேதி வெளியாக உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், மெலனியா எழுதியிருக்கும் சுயசரிதை புத்தகம் டிரம்ப்பின் அரசியல் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024