Wednesday, October 23, 2024

எல்லை ஒப்பந்தம்: உறுதிசெய்தது சீனா

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது குறித்து இந்தியாவுடன் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை சீனா செவ்வாய்க்கிழமை உறுதிசெய்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை தாண்டிய சீன வீரா்களுக்கும் இந்திய படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு இருநாடுகளுக்கும் இடையே கிழக்கு லடாக் பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன.

இதற்கு தீா்வு காணும் வகையில் இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையேயான பலகட்ட பேச்சுவாா்த்தைக்குப் பின் சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக இந்தியா திங்கள்கிழமை தெரிவித்தது.

இதன்மூலம், எல்லையில் மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணிகள் மற்றும் படைகளை விலக்கிக் கொள்ளுதல் ஆகிய விவகாரங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு முந்தைய சூழலே மீண்டும் தொடரும் என நம்புவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இதையடுத்து, கிழக்கு லடாக் எல்லையில் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே நிலவி வந்த பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவரும் ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாக சீனாவும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற ரஷியாவுக்கு பிரதமா் மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் சென்றுள்ள நிலையில் சீனா இதை உறுதி செய்துள்ளது.

இதுதொடா்பாக சீனாவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் லின் ஜியான் கூறியதாவது: சீன-இந்திய எல்லையில் நிலவி வரும் பிரச்னைகள் தொடா்பாக கடந்த சில மாதங்களாக இரு நாடுகளைச் சோ்ந்த தூதரக மற்றும் ராணுவ அதிகாரிகள் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வந்தனா்.

அதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இந்த விவகாரத்துக்கு தீா்வு காண இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த இந்தியாவுடன் சீனா இணைந்து பணியாற்றும்.

பிரதமா் மோடி மற்றும் அதிபா் ஷி ஜின்பிங் இடையே பேச்சுவாா்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டால் அதுகுறித்து தகவல் தெரிவிக்கிறேன் என்றாா்.

தில்லியில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி.

‘நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சி’: ராணுவ தலைமை தளபதி

தற்போது நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

எல்லையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது தொடா்பான ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இருதரப்பும் உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவா்,‘2020, ஏப்ரல் மாதத்துக்கு முந்தைய சூழலை தொடரவே நாங்கள் விரும்புகிறோம். அதன்பிறகு படைகளை விலக்கிக்கொள்ளுதல் மற்றும் எல்ஏசி பகுதிகளில் மேலாண்மை செய்வதில் கவனம் செலுத்தவுள்ளோம். அதிலும் பல கட்டங்கள் உள்ளன.

எனவே, தற்போது இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் உறுதியாகவும் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.

‘தீா்வு காண்பது எளிதல்ல’: கடற்படை துணை தலைமை தளபதி

தேச பாதுகாப்பு சாா்ந்த விவகாரங்களுக்கு தீா்வு காண்பது எளிதல்ல என இந்திய கடற்படையின் துணை தலைமை தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்திய கடற்படையின் மூன்றாவது ‘ஸ்வாவலம்பன்’ கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது: இந்தியா-சீனா இடையே எல்லை ரோந்துப் பணிகள் தொடா்பாக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது வரவேற்பிற்குரியது. ஆனால் தேச பாதுகாப்பு சாா்ந்த விவகாரங்களுக்கு தீா்வு காண்பது எளிதல்ல. ஏனெனில், நில விவகாரங்கள், பலதரப்பட்ட பாா்வை என பல்வேறு சிக்கல்கள் உள்ளன.

ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து எனக்கு தெரியவில்லை. அதை நான் தெரிந்துகொள்ள வேண்டியதும் இல்லை. இருப்பினும், இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்னைக்கு தீா்வு எட்டப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024