ஏஐ மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

by rajtamil
Published: Updated: 0 comment 15 views
A+A-
Reset

தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் குறித்து அமெரிக்காவின் பிஎன்ஓய் மேலன் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்த மூன்று ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருவதோடு, முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய லட்சியத்தினைக் கொண்டதாகும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு முன்னெடுப்புகள், உலகளாவிய நிறுவனங்களின் கவனங்களை வெகுவாக ஈர்த்திருக்கும் காரணத்தால் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றது.

தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சிறப்பான வளர்ச்சியைப் பெற பல்வேறு சீரிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நாளைய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை வளர்த்திடும் வகையில் மாபெரும் திறன் மேம்பாட்டு திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை அரசு தொடங்கி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

படித்த திறன்மிகு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பயணத்தின் போது, அமெரிக்க நாட்டின் சிகாகோவில், பிஎன்ஓய் மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

சிகாகோவில் பிஎன்ஓய் மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

அயலக மண்ணில் இருந்தாலும் அரசுப் பணி தொடர்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பிஎன்ஓய் மெலன் வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும். இந்த வங்கி நிதி பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த வங்கி சொத்து சேவை, கருவூல சேவை, முதலீடுகள் மேலாண்மை போன்ற சேவைகளை அமெரிக்க நாட்டின், நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்தியாவிலும் இந்த வங்கிக்கு பல கிளைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பத்தை வங்கி சேவைகளில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வரின் வழிகாட்டுதலோடு தமிழ்நாட்டு அரசுடன் இணைந்து வங்கி சேவைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

பிஎன்ஓய் மெலன் வங்கி தனது ஆறு முக்கிய மையங்களில் ஒன்றாக சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அதிகளவு கணினி பொறியியல் படித்த மாணவர்கள் உள்ளதால் சென்னையில் சர்வதேச தரத்தில் பயிற்சி மையம் அமைத்திடவும், தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், மென்பொருள் மேலாண்மை மற்றும் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, பிஎன்ஓய் மெலன் வங்கியின் துணைத் தலைவர் செந்தில் குமார், செயற்கை நுண்ணறிவு பிரிவு தலைவர் சர்தக் பட்நாயக், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024