சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஏவுகணை பரிசோதனை செய்த வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
வட கொரியாவின் இத்தகைய செயல் குறித்து அமெரிக்கா – ஜப்பான் – தென் கொரியாவைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் தொலைபேசி மூலம் ஆலோசித்தனர். இதில், ஜப்பான் வெளியுறவுத் துறை துணை இயக்குநர் ஒகோசி அகிரோ, தென் கொரிய தீபகற்ப கொள்கை இயக்குநர் லீ ஜுன் இல், கொரியா மற்றும் மங்கோலியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை இயக்குநர் சேத் பெய்லி ஆகியோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏவுகணை பரிசோதனை செய்த வட கொரியாவின் செயல் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு எதிரானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது நேரடியான விதிமீறல் என்றும் பிராந்திய மற்றும் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எதிரான செயல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடகொரியாவின் வடக்கு வான்கேஹே மாகாணத்திலிருந்து இன்று காலை 7.30 மணிக்கு ஏவுகணைகளை கிழக்கு கடலில் ஏவி பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.