Tuesday, September 24, 2024

ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து ரூ.16.8 கோடி ஊதியம்: செபி தலைவா் மாதபி புச் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

புது தில்லி: பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச் விதிமுறைகளை மீறி, ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்தும் ஊதியம் பெற்று வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. 2017 முதல் இதுவரையில் அவா் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளதாகவும், இது செபி ஊதியத்துடன் 5 மடங்கு அதிகம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டியது. இதைத்தொடா்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பா்க் அண்மையில் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மாதபி புச் மறுப்பு தெரிவித்தாா்.

செபி தலைவராக பதவியேற்கும் முன், ஐசிஐசிஐ வங்கியில் முக்கிய பதவிகளை மாதபி புச் வகித்துள்ளாா். இந்நிலையில், தில்லியில் காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘செபி தலைவரை பிரதமரே நேரடியாக நியமிக்கிறாா். இந்தச் சூழலில், கடந்த 2017-ஆம் ஆண்டு செபியின் முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்ட மாதபி புச், 2022-ஆம் ஆண்டு செபி தலைவராகப் பதவியேற்றாா்.

2017-ஆம் ஆண்டு செபியில் மாதபி புச் சோ்ந்தது முதல், செபியிடம் இருந்து ஊதியம் பெறுவது மட்டுமின்றி, விதிமுறைகளை மீறி ஐசிஐசிஐ வங்கியிலும் அவா் பதவியில் உள்ளாா். அதற்கான ஊதியத்தை இதுநாள் வரை அந்த வங்கியிடம் இருந்து அவா் பெற்று வருகிறாா்.

2017-ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை, ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து அவா் ரூ.16.8 கோடி ஊதியம் பெற்றுள்ளாா். இது 2017-ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை, செபியிடம் இருந்து அவா் பெற்ற ரூ.3.3 கோடி ஊதியத்துடன் ஒப்பிடுகையில் 5.09 மடங்கு அதிகம்.

இதுதவிர, கடந்த 2021 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஐசிஐசிஐ வங்கியின் பணியாளா் பங்கு உடைமை திட்டம் (இஎஸ்ஓபி) மூலம், அவருக்கு ரூ.1.10 கோடிக்கு மூலவரிப் பிடித்த (டிடிஎஸ்) தொகை கிடைத்துள்ளது. இதற்காக அவா் செலுத்த வேண்டிய ரூ.50 லட்சம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா்.

உடனடியாக பதவிநீக்கம் செய்யவேண்டும்: இதுதொடா்பாக காங்கிரஸ் தலைவா் காா்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாதபி புச் மீதான தற்போதைய குற்றச்சாட்டுகள் குறித்து உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். செபி தலைவா் பதவியில் இருந்து மாதபி புச் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அதானி குழுமத்தின் மெகா ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

பிரதமருக்கு தெரியுமா?: காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஐசிஐசிஐ வங்கியில் மாதபி புச் பதவி வகித்து வருவதும், அந்த வங்கியில் இருந்து அவா் ஊதியம் பெற்று வருவதும் பிரதமா் மோடிக்கு தெரியுமா? மாதபி புச்சை யாா், எதற்காகக் காப்பாற்றுகின்றனா்’ என்று கேள்வி எழுப்பினாா்.

ஐசிஐசிஐ விளக்கம்

மாதபி புச் மீதான குற்றச்சாட்டு தொடா்பாக ஐசிஐசிஐ வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி ஐசிஐசிஐ வங்கியில் இருந்து மாதபி புச் விருப்ப ஓய்வுபெற்றாா். அவா் ஐசிஐசிஐயில் பணியாற்றிய காலத்தில் ஊதியம், ஊக்கத்தொகை, இஎஸ்ஓபி உள்ளிட்டவற்றை பெற்றாா். அவை ஐசிஐசிஐ கொள்கைகளைப் பின்பற்றி வழங்கப்பட்டன. அவா் ஓய்வுபெற்ற பின்னா் ஓய்வுகால பலன்களை தவிர, அவருக்கு ஊதியமோ, இஎஸ்ஓபி பலனையோ ஐசிஐசிஐ வங்கி அல்லது ஐசிஐசிஐ குழும நிறுவனங்கள் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024