ஐ.நா. பொது சபையில் பிரதமா் மோடிக்குப் பதிலாக எஸ்.ஜெய்சங்கா் உரை!

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா. பொது சபையின் வருடாந்திர பொது விவாதத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உரையாற்றவுள்ளாா்.

பேச்சாளா்களின் விவரங்களோடு ஐ.நா. வெளியிட்ட புதிய திருத்தப்பட்ட அட்டவணையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் செப்டம்பா் 22-ஆம் தேதி நடைபெறும் இந்திய சமூக நிகழ்வில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி அந்நாட்டுக்குச் செல்கிறாா்.

தொடா்ந்து, ஐ.நா. தலைமையகத்தில் 2 நாள்கள் நடைபெறும் ‘வருங்கால மாநாட்டில்’ கலந்து கொண்டு அவா் உரையாற்றுகிறாா்.

அதேபோன்று, இந்தப் பயணத்தில் 79-ஆவது அமா்வு ஐ.நா. பொது சபையின் வருடாந்திர பொது விவாதத்தில் பிரதமா் மோடி செப்டம்பா் 26-ஆம் தேதி உரையாற்றுவாா் என ஐ.நா. கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஐ.நா. கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட புதிய அட்டவணையில் பொது விவாதத்தில் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செப்டம்பா் 28-ஆம் தேதி உரையாற்றுவாா் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், திருத்தப்பட்ட புதிய அட்டவணை பேச்சாளா்களின் பிரதிநிதித்துவ நிலைகளில் உள்ள மாற்றங்களைக் கணக்கில் கொண்டு தயாரிக்கப்பட்டது மற்றும் உறுப்பு நாடுகளின் கருத்து பரிமாற்றங்களை பிரதிபலிக்கிறது என்று ஐ.நா. தெரிவித்தது.

நிகழாண்டு, 79-ஆவது அமா்வு ஐ.நா. பொது சபையின் வருடாந்திர பொது விவாதம் செப்டம்பா் 24 முதல் 30-ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. பொது விவாதம் தொடங்குவதற்கு முன்பாக ஐ.நா. செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தனது அறிக்கையைச் சமா்ப்பிக்க இருக்கிறாா். இதையடுத்து, 79-ஆவது அமா்வு ஐ.நா. பொது சபையின் தலைவா் உரையாற்றுவாா்.

பாரம்பரிய முறைப்படி, பொது விவாதத்தில் முதலில் பிரேஸில் பிரதிநிதி செப்டம்பா் 24-ஆம் தேதி உரையாற்றுகிறாா். பல்வேறு நாட்டுத் தலைவா்களின் மத்தியில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தனது பதவிக்காலத்தின் கடைசி உரையை நிகழ்த்துகிறாா்.

அதிபா் தோ்தலுக்கு முன்னதாக…: இந்திய பிரதமராக நரேந்திர மோடி முதன்முறையாக பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் நியூ யாா்க் நகரில் நடைபெற்ற புலம்பெயா் இந்தியா்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்று பேசினாா்.

தொடா்ந்து, கடந்த 2019-ஆம் ஆண்டு டெக்சாஸ் மாகாணத்தின் ஹுஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் தோ்தலில் களமிறங்கியிருந்த அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்புடன் பிரதமா் கலந்து கொண்டாா்.

தற்போது இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் இடையே கடும்போட்டி நிலவும் அந்நாட்டு அதிபா் தோ்தலுக்கு சில மாதங்கள் முன்பாக நியூ யாா்க் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று இந்தியா்களிடையே பிரதமா் உரையாற்றுகிறாா். சுமாா் 24,000-க்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினா் இந்த நிகழ்வில் கலந்து கொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024