Wednesday, September 25, 2024

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை!

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் திடீரென மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளதால், காவிரி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்தானது சனிக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 22,000 கன அடியாகவும், ஞாயிறுக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 25,000 கன அடியாக அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கும், அருவிகளில் குளிப்பதற்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி ஞாயிற்றுக்கிழமை முதல் தற்காலிகத் தடை விதித்துள்ளார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

okenakal
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் ஐவர் பாணியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.

தடை உத்தரவின் காரணமாக பிரதான அருவி செல்லும் நடைப்பாதை பூட்டப்பட்டு, சின்னாறு பரிசல் துறையில் இருந்து பரிசல் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம், அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுப் பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024