Saturday, September 21, 2024

ஒடிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவிலின் 4 கதவுகளும் பக்தர்களுக்காக திறப்பு

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

புவனேஸ்வரம்,

ஒடிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவிலின் 4 கதவுகளும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டன. பா.ஜனதா அரசு பதவியேற்ற மறுநாளே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் புரி நகரில் புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் உள்ளது. நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

கொரோனா தொற்றுக்கு முன்பு வரை இந்த கோவிலின் 4 நுழைவாயில்கள் வழியாகவும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

கொரோனா காரணமாக கோவிலுக்கு பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்ட பிறகு பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் கோவிலின் சிங்க வாயில் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற 3 நுழைவாயில்களும் மூடப்பட்டன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனத்துக்காக பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் ஒடிசா சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜனதா தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் புரி ஜெகநாதர் கோவிலின் 4 நுழைவாயில்களும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படும் என வாக்குறுதி அளித்தது.

இந்த நிலையில் தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்ற நிலையில் நேற்று முன்தினம் ஒடிசாவின் புதிய முதல்-மந்திரியாக மோகன் சரண் மாஜி பதவியேற்றார். அதைத்தொடர்ந்து அவரது தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் புரி ஜெகநாதர் கோவிலின் 4 நுழைவாயில்களையும் திறக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, 2 துணை முதல்-மந்திரிகள், மந்திரிகள், பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் நேற்று அதிகாலை புரி ஜெகநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு அவர்களின் முன்னிலையில் கோவிலின் 4 நுழைவாயில் கதவுகளும் திறக்கப்பட்டன. இதன்மூலம் பா.ஜனதா தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது.

கோவிலின் கதவுகள் திறக்கப்பட்ட பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி "பதவி ஏற்பு நிகழ்வு முடிந்ததும், பா.ஜனதா அரசு ஜெகநாதர் கோவிலின் நான்கு கதவுகளையும் திறக்க முடிவு செய்தது. அதன்படி இன்று (அதாவது நேற்று) காலை 6.30 மணிக்கு மங்கள அலட்டி சடங்குக்கு பின்னர் கதவுகள் திறக்கப்பட்டன.

சூழ்நிலைகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகையை சீர்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். மேலும், கோவிலின் சிறந்த நிர்வாகம், பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது" என்றார்.

You may also like

© RajTamil Network – 2024