Tuesday, October 22, 2024

ஒடிஸா: ரூ.7,000-க்கு விற்கப்பட்ட ஒரு மாதக் குழந்தை மீட்பு!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

ஒடிஸாவில் ரூ.7,000-க்கு விற்கப்பட்ட ஒரு மாதக் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஸாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தின் தசரதாபூர் பகுதியில் குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.7,000-க்கு விற்கப்பட்ட ஒரு மாத ஆண் குழந்தையை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.

காணாமல் போன குழந்தையை மீட்குமாறு குழந்தையின் தாய் ஜாஜ்பூர் காவல்துறையினரிடம் புகாரளித்ததையடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிக்ரம் முண்டாவும், அவரது மனைவி ஜங்காவும் தினக்கூலித் தொழிலாளிகளாக வேலை செய்து கடந்த பல ஆண்டுகளாக பிரஜா கோயிலுக்கு அருகில் வசித்து வருகின்றனர்.

இந்தத் தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு பெண் உள்பட இரண்டு குழந்தைகள் இருந்தபோதிலும், ஜங்கா கடந்த மாதம் மற்றொரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்த இந்தத் தம்பதியினர் தங்களது மூன்றாவது குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியாததால், நீண்ட யோசனைக்குப் பிறகு, தசரதாபூர் தொகுதிக்குள்பட்ட ஹலடிபாடா கிராமத்தைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதியான கலியா ஜெனா மற்றும் அவரது மனைவிக்கு இவர்களது ஒரு மாத ஆண் குழந்தையை 10 நாள்களுக்கு முன்பு இடைத்தரகர் மூலம் ரூ.7,000-க்கு விற்றதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், ஜங்கா சில நாட்களுக்குப் பிறகு தனது மனதை மாற்றிக்கொண்டு, தனது குழந்தையைத் திரும்பக் கொண்டுவரும்படி பிக்ரமிடம் கேட்டுள்ளார். தம்பதியினர் இடைத்தரகருடன் கலியாவின் வீட்டிற்குச் சென்று, பணத்தைத் திருப்பித் தர முன்வந்தனர். ஆனால், கலியா குழந்தையைத் திருப்பித் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.

பிக்ரமும், ஜங்காவும் ஜாஜ்பூர் டவுன் காவல் நிலையத்திற்குச் சென்று, தங்கள் குழந்தையை மீட்டுத் தருமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர், சைல்டு லைன் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஹலடிபாடா கிராமத்திற்கு சென்று குழந்தையை மீட்டனர்.

இதுகுறித்து சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பரேந்திர கிருஷ்ண தாஸ் கூறுகையில், “ஆண் குழந்தை எங்களின் பாதுகாப்பில் உள்ளது. அந்தக் குழந்தை, குழந்தைகள் நலக் குழுவின் முன் ஆஜர்படுத்தப்படுவார். அதன்பிறகு அடுத்த நடவடிக்கை குறித்து நாங்கள் முடிவு செய்வோம்” என்றார்.

You may also like

© RajTamil Network – 2024