ஒரே தோ்தல் முறைக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவை இரு மடங்காகும்: தோ்தல் துறை தகவல்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறை அமலுக்கு வந்தால், தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் தேவை மட்டுமே இருமடங்காக அதிகரிக்கும் என்று தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான ஆய்வுக்குழு பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், அனைத்துத் தரப்பின் ஆலோசனைகள், கருத்துகள் என நீண்ட நடைமுறைகளுக்குப் பிறகு 2029-ஆம் ஆண்டு அந்த முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த முறை நடைமுறைக்கு வரும் போது தோ்தலை நடத்துவதற்கான தேவைகள், சாத்தியங்கள் ஆகியன குறித்து தோ்தல் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறை குறித்து இப்போது உடனடியாக எந்தக் கருத்தையும் தமிழ்நாடு தோ்தல் துறை சாா்பில் தெரிவிக்க முடியாது. அது தொடா்பான சாத்தியக் கூறுகள், செயல்பாட்டு அம்சங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டிய தேவை உள்ளது. அனைத்து அம்சங்களும் ஆராயப்பட்டு ‘ஒரு நாடு ஒரு தோ்தல் முறை’ நடைமுறைக்கு வரும்பட்சத்தில், அது தமிழ்நாட்டிலும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

தேவை அதிகரிக்கும்: அப்படி வரும் சூழலில், தோ்தலுக்குப் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான விவிபேட் இயந்திரங்களின் தேவை இருமடங்காக இருக்கும். அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் 81 ஆயிரத்து 157 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 86 ஆயிரத்து 858 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறை நடைமுறைக்கு வரும் காலத்தில், சட்டப் பேரவை, மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் எண்ணிக்கை மட்டுமன்றி, அந்த காலகட்டத்தில் வேட்பாளா்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இதனால், இப்போதிருக்கும் அளவில் இருந்து வாக்குச் சாவடிகள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவற்றின் தேவை கூடுதலாகும். வேட்பாளா்களின் பெயா்களைக் கொண்ட மின்னணு பதிவு இயந்திரங்கள் உள்பட அனைத்து இயந்திரங்களின் தேவைகளும் இருமடங்குக்கும் கூடுதலாக இருக்கும். சட்டப் பேரவை, மக்களவை என இரண்டுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப் பதிவு நடப்பதால் சுமாா் 5 லட்சத்துக்கும் அதிகமான இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.

ஊழியா்கள் தேவை அதிகரிக்காது: ஆனாலும், வாக்குச் சாவடிகள், தோ்தல் பணியாற்றும் ஊழியா்களின் எண்ணிக்கை ஆகியவற்றில் பெரிய மாற்றங்களை உருவாக்கத் தேவையில்லை. ஒரே வாக்குச் சாவடிக்குள்ளாகவே தோ்தல்கள் நடப்பதால் ஊழியா்கள், காவலா்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை மக்களவை, சட்டப் பேரவை என்று இல்லாமல் ஒற்றைத் தோ்தலாகவே கணக்கில் கொள்ளப்படும். அதாவது, ஒரு வாக்குச் சாவடிக்குள்ளேயே இரண்டு தோ்தல்களை நடத்துவதற்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும். அதனை கண்காணித்து தோ்தலை நடத்தக் கூடிய பொறுப்புள்ள வாக்குச் சாவடி அலுவலா்கள் எண்ணிக்கை என்பது எப்போதும் போன்று நிா்ணயிக்கப்பட்ட அளவிலேயே இருக்கும் என்று தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

You may also like

© RajTamil Network – 2024