“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை” –  சீமான் கருத்து

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை” – சீமான் கருத்து

ராமநாதபுரம்: “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இங்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் உள்ள திருமண மஹாலில் இன்று (செப்.19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “திமுகவில் கொத்தடிமையாக ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அதில் மூத்தவர்களே உதயநிதியை துணை முதல்வராக வேண்டும் என சொல்ல வைக்கின்றனர். யார் மதுவை ஒழிப்பார்களோ அவர்களுடன் திருமாவளவன் கூட்டணி வைத்திருந்தால் அது சரியாக இருந்திருக்கும். அப்படியில்லாமல் அந்தக் கூட்டணியில் அவர் சிக்கிக் கொண்டார். ஆனால், அவரது மது ஒழிப்பு நோக்கத்தை விமர்சிக்க முடியாது.

ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, இஸ்லாமிய அமைப்புகளின் வாக்குகள் இல்லாமலா திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது? எல்லோருடைய வாக்குகள் வேண்டும், ஆனால், அதிகாரத்தில் மட்டும் பங்கு கொடுக்க மறுக்கின்றனர். திமுக மட்டும் மத்திய கூட்டணியில் ஆட்சியில் பங்கு கேட்கிறது. மத்திய கூட்டணி ஆட்சியில் 18 ஆண்டுகள் திமுக பதவி வகித்துள்ளது.

திமுக, அதிமுகவுக்கு விவசாயிப் பற்றியோ , விவசாயத்தைப் பற்றியோ அருமை தெரிவதில்லை. அரசுக்கு தெரியாமலா போலீஸ் போதைப் பொருட்களை விற்க அனுமதிக்கிறது? அரசு தான் போதைப்பொருள் விற்க அனுமதிக்கிறது. கஞ்சா, அபின் மட்டுமா போதைப்பொருள், டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவும் போதைப்பொருளே. தற்போது இலங்கை அரசு ராமேசுவரம் மீனவர்களை மொட்டை அடித்து அனுப்பியுள்ளது. இது நாட்டின் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவமானமாக தெரியவில்லையா?

கச்சத்தீவை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தாந்தோன்றித்தனமாக இலங்கைக்கு தாரை வார்த்தார். ஆனால், அப்போதைய ராமநாதபுரம் எம்பி-யான மூக்கையாத்தேவர் மட்டுமே நாடாளுமன்றத்தில் அதற்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது ஆட்சியில் இருந்த திமுக ஒரு போாராட்டம்கூட நடத்தவில்லை. ஒருமுறை எங்களிடம் ஆட்சியை கொடுத்துப்பாருங்கள். என் மீனவரை யாரும் தொட்டுவிடமுடியுமா?

அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய அமைச்சரிடம் கேட்டதில் தவறில்லை. தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீதம் வரி. ஆனால், குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதம் வரி. ஜிஎஸ்டி வரியை வைத்து மக்கள் நலத் திட்டங்களுக்கு இதுவரை எத்தனை கோடி செலவழித்தோம் என மத்திய அரசு பட்டியல் வெளியிட்டதில்லை.ஜிஎஸ்டி, நீட் தேர்வு, என்ஐஏ என அனைத்தையும் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு தான். பணம் செல்லாது என மட்டும் அறிவித்தவர் பிரதமர் மோடி.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இந்தியா ஒரே நாடல்ல. பல மொழி, பல கலாச்சாரம் என பன்முகைத்தன்மை கொண்ட நாடு. ஏன் வடமாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்துகின்றனர்? தேசியத்தை, தேசிய ஒருமைப்பாட்டை பற்றி பேச பாஜகவுக்கு தகுதியில்லை.

மாஞ்சோலை தோட்ட விவகாரத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சாராயக்கடை நடத்துவார்கள், மாஞ்சோலை திட்டத்தை எடுத்து நடத்துவார்களா?. இவர்களுக்கு தான் மக்கள் வாக்களிக்கின்றனர். தமிழகத்தில் தான், நியூட்ரினோ திட்டம், காவிரி படுகையில் மீத்தேன், ஈத்தேன் வாயு எடுக்கும் திட்டம் எனக் கொண்டு வருகின்றனர். மற்ற மாநிலங்களில் இல்லை. மற்றவர்களுக்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் சோதனை நடத்தினர். என்னிடம் ஒன்றும் இல்லாததால் என்ஐஏ சோதனை நடத்தினர். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் தரகர் வேலை செய்கிறார்" என்று சீமான் கூறினார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024