Friday, September 20, 2024

ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனை 24 வயதில் ஓய்வு அறிவிப்பு

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி,

பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணி முதல் முறையாக ரவுண்ட் ஆப் 16 சுற்றை தாண்டி, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதியில் ஜெர்மனியுடன் மோதிய இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.

இருப்பினும் ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி சுற்று வரை முன்னேறியது இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய மகளிர் டேபிள் டென்னிஸ் அணியில் இடம்பெற்ற 24 வயது வீராங்கனை அர்ச்சனா காமத், விளையாட்டு துறையில் இருந்து ஓய்வு பெற்று, மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அவரது பயிற்சியாளர் அன்ஷுல் கார்க் கூறுகையில், "பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து திரும்பியவுடன் அர்ச்சனா என்னிடம் 2028 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் குறித்து கேட்டார். அது மிகவும் கடினமானது என்றும், அதற்கு மிக அதிகமான பயிற்சி தேவை என்றும் கூறினேன்.

தற்போது அவர் உலக அளவிலான தரவரிசையில், முதல் 100 இடங்களுக்கு வெளியே இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் அர்ச்சனா மிகவும் முன்னேறியுள்ளார். இருப்பினும் தனது முடிவை ஏற்கனவே அவர் தீர்மானித்துவிட்டார் என்று நினைக்கிறேன். அவரது முடிவை மாற்றுவது கடினம்.

நமது நாட்டில், முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு உபகரணங்கள் மற்றும் பயிற்சியை பெறுவதற்கான ஸ்பான்சர்கள் எளிதாக கிடைக்கின்றன. அதே சமயம், வளர்ந்து வரும் வீரர், வீராங்கணைகளுக்கு உபகரணங்கள் மற்றும் பயிற்சிக்கான ஸ்பான்சர்கள் கிடைத்தாலும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கான வழி கேள்விக்குறியாகவே இருக்கிறது. எனவே, அர்ச்சனாவின் முடிவை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்று தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024