ஒவ்வொரு ஆண்டும் புதிய தேர்கள்..! பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் பூரி ரத யாத்திரை

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

பூரி நகரின் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் அசைந்து செல்லும் காட்சியை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

பூரி:

ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரமான பூரியில் ஜெகநாதர் கோவில் உள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது மற்றும் மிகவும் பிரபலமானது. இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று.

இந்த கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது.

ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். ஜெகநாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்திரருக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய 3 பிரமாண்டமான தேர்கள் உருவாக்கப்படும். 16 சக்கரங்களை கொண்ட தேரில் ஜெகநாதரும், 14 சக்கரங்களை கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருள, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்துச் செல்வார்கள். இந்த ரத யாத்திரையை காண கண்கோடி வேண்டும் என்பார்கள்.

9 நாட்கள் இந்த திருவிழா நடக்கும். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோவிலான மவுசிமா கோவிலுக்கு சென்று ஓய்வு எடுப்பார்கள். பின்னர் அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை சென்றடைந்ததும் ஜெகன்நாதர் ஓய்வெடுப்பார். திருவிழாவின் 4 நாளில் தனது கணவர் ஜெகநாதரை காண லட்சுமி தேவி, குண்டிச்சா கோவிலுக்கு வருகை தருவார். அதை தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு பின்னர் ஜெகன்நாதர் கோவிலை வந்தடைந்ததும் விழா நிறைவடைய உள்ளது.

இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று தொடங்குகிறது. இதற்காக கம்பீரமாக தேர்கள் உருவாக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பூரி நகரின் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் அசைந்து செல்லும் காட்சியை கண்டு தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024