நடிகா் சூா்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை நவ. 7-ஆம் தேதி வரை வெளியிடப் போவதில்லை என ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல் ராஜா, தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சாா்பில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 99 கோடியே 22 லட்சத்து 49 ஆயிரம் கடன் பெற்றிருந்தாா். இதில் ரூ. 45 கோடியை திருப்பி செலுத்திய ஞானவேல் ராஜா, மீதமுள்ள ரூ. 55 கோடியை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை திருப்பித் தராமல் நடிகா் சூா்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்த போது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில், ‘நவம்பா் 7-ஆம் தேதி வரை கங்குவா திரைப்படம் வெளியிடப்பட மாட்டாது என்றும், தங்கலான் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட மாட்டாது என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவ.7-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.