கடந்த ஆண்டு பஸ் பயண அட்டையை கொண்டு மாணவர்கள் பயணிக்கலாம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

கடந்த ஆண்டு பஸ் பயண அட்டையை கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்கலாம் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளது. அதேபோல், அரசு கலைக் கல்லூரிகளும் அதே நாளில் திறக்கப்பட இருக்கிறது.

2024-25-ம் கல்வியாண்டில் மாணவ-மாணவிகளுக்கான கட்டணமில்லா புதிய பஸ் பயண அட்டையை வழங்குவதில் உள்ள கால அளவினை கருத்தில் கொண்டு கடந்த கல்வியாண்டில் (2023-24) வழங்கப்பட்ட பஸ் பயண அட்டை, பள்ளி மாணவ-மாணவிகள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனரிடம் காண்பித்து தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி வரையில் பயணிக்கலாம்.

இதேபோல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஐ.டி.ஐ. மாணவ-மாணவிகளும் 2023-24-ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பஸ் பயண அட்டை அல்லது தங்களுடைய கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி பஸ்களில் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மேலும் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து கட்டணமில்லா பயண அட்டையினை இந்த மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பள்ளிகள் தொடங்கும், முடியும் நேரம் வரை பஸ்கள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உரிய பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி மாணவ-மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல மாநகர போக்குவரத்து கழக டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டு இருப்பதாகவும் மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது.

You may also like

© RajTamil Network – 2024