நடிகை சமந்தா ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அதில் கடந்த காலங்களில் தவறிழைத்து விட்டதாகக் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து, கருத்து வேறுபாட்டின் காரணமாக 2021-இல் விவாகரத்து செய்தனர்.
கடந்த ஆக.8ஆம் தேதி நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சில மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ளது.
சிட்டாடல் தொடர் ரிலீஸை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில் சமந்தா கூறியதாவது:
நான் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் என்னை நானே மிகுந்த சவாலுக்கு உள்படுத்துவேன் என எனக்கு நானே சத்யம் செய்துகொண்டேன். கடந்த காலங்களில் சில தவறுகள் செய்துவிட்டதை ஒப்புக்கொள்கிறேன். நான் நினைத்தது மாதிரி படங்கள் வெற்றியடையவில்லை. என்னுடைய கடைசி சில படங்களில் நான் என்னுடைய சிறந்தவற்றை வழங்கவில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்.
சிட்டாடல்: ஹனி பன்னி தொடரில் எனது கதாபாத்திரம் குறித்து பெருமையாக இருக்கிறது. எனது சினிமா வாழ்க்கையி ல் மிகவும் கடினமான, பல தளங்களில் அமைந்த, சவலான ஒரு கதாபாத்திரம் என்றால் அது இந்தப் படத்தில்தான். ஆனால், அது எப்படி இருக்கிறதென நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
நடிகை சமந்தா கடைசியாக குஷி படத்தில் நடித்திருந்தார். தற்போது, மா இன்டி பங்காரம் படத்தில் நடித்து வருகிறார். சிட்டாடல் இணையத்தொடர் ஓடிடியில் வெளியானது.
கௌதம் மேனம் இயக்கும் படத்தில் மலையாளத்திலும் சமந்தா அறிமுகமாகவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜிக்ரா புரமோஷன் நிகழ்வில் ஆலியா பட் சமந்தாவை இந்தியாவின் முக்கியமான நடிகை என மிகவும் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.