கடலோர மாவட்டங்களில் பெருமழை! வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

தமிழகக் கடலோர மாவட்டங்களில் அதிக மழையை தரவிருக்கும் வடகிழக்குப் பருவமழை கால அவசரத் தேவைக்கான உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

தென்காசி வெதர்மேன் என்ற பெயரில் வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டு வருபவர் தென்காசியைச் சேர்ந்த ராஜா. சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வானிலை நிலவரங்களை கண்காணித்து வரும் ராஜா தெரிவித்து வந்த வானிலை முன்னறிவிப்புகள் அப்படியே பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், நிகழாண்டு வரவுள்ள வடகிழக்குப் பருவ மழை காலத்தில் தீவிர மழைப் பொழிவு இருக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் மழை அதிகம் பதிவாக வாய்ப்புள்ளதால் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்குப் பருவ மழை குறித்தும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,

வடகிழக்கு பருவமழை என்றால் என்ன?

தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஈரப்பதம் மிக்க காற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழையை கொடுத்த பின்னர் இமயமலை மேல் மோதி திரும்புவதால் அதை பின்னடையும் பருவகாற்று என்று அழைப்போம். தென்மேற்குப் பருவமழைக் காலம் முடிவடைந்த பின்னரே வடகிழக்குப் பருவமழைக் காலம் துவங்க சாதகமான சூழல் நிலவும். அதாவது சைபீரிய பகுதியில் நிலவும் உயர் அழுத்தத்தின் காரணமாக தெற்கு நோக்கி காற்று வீச ஆரம்பிக்கும். வடகிழக்கு திசையிலிருந்து வீசும் இந்த

காற்றானது வங்கக் கடலை அடையும் போது ஈரப்பதத்தை பெற்று தமிழகத்திற்கு அதிக மழையை தருகிறது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் தென்மேற்குப் பருவமழையை நம்பியிருக்கும் நிலையில் தமிழகம் மட்டுமே வடகிழக்குப் பருவமழையை நம்பியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டு மழைப் பொழிவில் 50-60 சதவிகிதம் மழையை வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தான் பெறுகிறது. அந்தளவு சிறப்பு பெற்ற மழைக் காலமாக வடகிழக்குப் பருவமழைக் காலம் திகழ்கிறது.

குறிப்பாக தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் ஆண்டு மழைப்பொழிவில் 80 சதவிகிதம் மழையை வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெறுகின்றன.

வடகிழக்கு பருவமழையை தீர்மானிக்கும் சக்திகள் எவை? நிகழாண்டு பருவமழை எப்படி இருக்கும்?

எல்நினோ, லநினோ, நடுநிலை இருமுனை நிகழ்வு, மேடன் ஜூலியன் அலைவு இந்தக் காரணிகளை பொறுத்தே வடகிழக்குப் பருவமழை அமையும். நிகழாண்டு லாநினோ ஆண்டாக அமைகிறது. நடுநிலை இருமுனை நிகழ்வும் உருவாகியுள்ளது.

தமிழகக் கடல் பரப்பு வெப்பநிலை:

தற்போது வங்கக் கடலின் வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாக ஆக உள்ளது. தென்மாவட்டங்களை ஒட்டிய மன்னார் வளைகுடா குமரிக் கடல் பகுதியின் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாக உள்ளது.

வடகிழக்குப் பருவமழை சராசரியாக அக்டோபர் 20 ஆம் தேதி துவங்கும். ஆனால், நிகழாண்டு தமிழகத்தைப் பொறுத்தவரை அக்டோபர் 3 ஆவது வாரத்தில் பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை முன்கூட்டியே துவங்குகிறது. 2014, 2019 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பருவமழை நிகழாண்டு முன்பே துவங்க உள்ளது.

வரலாறு சொல்வது என்ன?

1940 முதல் 2023 வரை உள்ள 84 ஆண்டுகளைக் கணக்கீடும் போது 42 ஆண்டுகள் லாநினோ ஆண்டுகளாக இருந்திருக்கிறது. லா நினோ இருந்த 42 ஆண்டுகளில் தமிழகம் 23 ஆண்டுகள் இயல்பான மழையும் 6 வருடங்கள் இயல்பை விட மிக அதிக மழையையும் 13 ஆண்டுகள் மழைப் பற்றாக்குறையையும் தமிழகம் சந்தித்துள்ளது.

கடந்த 24 ஆண்டுகளை கணக்கீடும் போது 2010, 2021 ஆகிய வருடங்கள் லா நினோ ஆண்டுகளாக இருந்திருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் தமிழகம் இயல்பைவிட மிக மிக அதிகமழையை பெற்றிருக்கிறது.

பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் மாற்றமே எல்நினோ, லா நினோ என்கிறோம். இதுவே உலக காலநிலையை தீர்மானிக்கிறது. உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் மாற்றம் ஏன் உலக காலநிலையை தீர்மானிக்கிறது?

உலகின் பெரும்பகுதி கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகக் கடல் பரப்பினை பசுபிக் பெருங்கடல் கொண்டிருப்பதால் அதில் ஏற்படும் மாற்றம் வெப்பநிலை குறைவு, அதிகரிப்பு ஆகியவை உலக காலநிலையை தீர்மானிக்கிறது.

தமிழகத்தில் பிற மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை எப்படி?

தமிழகத்தை பொறுத்தவரை நிகழாண்டு அனைத்துக் கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, தஞ்சை, நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமழை பெய்யும்.

தமிழகத்தில் புயல் தாக்க வாய்ப்பு:

தமிழகத்தில் நிகழாண்டு புயல் தாக்குவற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக டெல்டா முதல் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள் வரை புயலால் பாதிப்புகளை சந்திக்கும். வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சிறப்பான மழை காத்திருக்கிறது. டெல்டா மற்றும் வடகடலோரத்தை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்.

கடந்த சில ஆண்டுகளாக லாநினோ இருப்பதால் தென் மாவட்டங்களில் மழை பற்றாக்குறை ஏற்படும் என்று பெரும்பாலானோரால் கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் லாநினோ நிலவிய 2021 ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் இயல்பைவிட இரு மடங்கு அதிகமழை பதிவானது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் சராசரியாக வடகிழக்குப் பருவமழை காலத்தில் மட்டும் 841 மிமீ மழை பதிவானது.

கடந்த 2021ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் 592 மிமீ மழையும், தென்காசி மாவட்டம் 720 மிமீ மழையும், ராமநாதபுரம் மாவட்டம் 592 மிமீ மழையையும் பெற்று சாதனை படைத்தது.

இதையும் படிக்க |ஹரியாணாவில் பாஜகவுக்கு ஹாட்ரிக் வெற்றி! காங்கிரஸின் தோல்விக்கு காரணம்?

தென் மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு:

நிகழாண்டும் தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமழை பெய்யும். தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை தூத்துக்குடி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்கள் அதிக மழையைப் பெற்றாலும் குறிப்பாக தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம், உவரி ஆகிய கடலோரப் பகுதிகளில் குறுகிய காலக்கட்டத்தில் பெருமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல தென் தமிழக மலைப்பகுதிகளிலும் அதீத மழை பெய்யும்.

நாட்டிலேயே வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிக மழை பெறும் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, குதிரைவெட்டி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் 2500 மிமீக்கு மேல் இந்த பருவ காலத்தில் மழை பெறும்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் இந்தப் பருவ காலத்தில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் மழை இல்லாத நாட்களில் குளிரும் பனிப்பொழிவின் தாக்கமும் அதிகரிக்கும்.

ஜனவரி மாதத்தில் மழை தொடரும்:

இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை ஜனவரி மாதம் வரை தொடரும். கடந்த 100 ஆண்டுகளில் 34 ஆண்டுகள் வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை:

தமிழக கடலோர மாவட்டங்களில் குறுகிய காலத்தில் பெருமழை பெய்வதோடு புயலின் தாக்கம் இருக்க வாய்ப்பு இருப்பதால் நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தேசிய பேரிடர் மேலாண்மைதுறை மற்றும் தமிழகப் பேரிடர் மேலாண்மை துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024