கடவுளுக்கு நம்முடைய பாதுகாப்பு தேவையில்லை; சிவன் கோவிலை இடிக்க உத்தரவிட்ட ஐகோர்ட்டு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

புதுடெல்லி,

டெல்லியின் யமுனை ஆற்றுப்படுகையையொட்டி கீதா காலனி பகுதியில் தாஜ் என்கிளேவ் என்ற இடத்தில் சிவன் கோவில் ஒன்று எழுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஆற்று பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு உள்ளது என கூறி அதனை இடிக்க அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கான உத்தரவை ரத்து செய்ய கோரி, பிரசீன் சிவ மந்திர் அவாம் அகடா சமிதி என்ற அமைப்பு சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனை நீதிபதி தர்மேஷ் சர்மா விசாரணைக்கு எடுத்து கொண்டார். இதுபற்றிய வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதி, கடவுள் சிவனுக்கு நம்முடைய பாதுகாப்பு தேவையில்லை. அதனைவிட, மக்களாகிய நாம்தான் அவரிடம் சென்று பாதுகாப்பையும், ஆசிகளையும் கோரி வருகிறோம் என கூறினார்.

யமுனை ஆற்றுநீர் பாய கூடிய சமவெளி பகுதிகள், அனைத்துவித ஆக்கிரமிப்புகள் மற்றும் அங்கீகாரமில்லாத கட்டுமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டால், கடவுள் சிவன் மகிழ்ச்சியடைவார் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், இந்த கோவில் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது என்பதற்கான எந்த சான்று பதிவும் இல்லை. கோவில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்பதற்கான ஆவணங்களும் இல்லை. அந்த வகையில், இந்த மனுவானது தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

எனினும், மனு தாக்கல் செய்தவர்கள், கோவிலில் உள்ள சிலைகள் மற்றும் மதம் சார்ந்த பிற பொருட்களை நீக்கி வேறு ஏதேனும் கோவிலில் வைப்பதற்கு 15 நாட்கள் காலஅவகாசமும் அளித்துள்ளார்.

அப்படி செய்ய தவறினால், இந்த பணியை டெல்லி வளர்ச்சி கழகம் மேற்கொள்ளும். இறுதியாக, அங்கீகாரமற்ற கட்டுமான பகுதியை இடிக்கும் பணியை டெல்லி வளர்ச்சி கழகம் செய்யும். இதனை மனு செய்தவரோ அல்லது அதன் உறுப்பினர்களோ தடை செய்ய கூடாது என்றும் கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க, உள்ளூர் போலீசார் மற்றும் நிர்வாகம் இந்த பணிக்கு, முழு அளவிலான உதவியை வழங்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்து உள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024