Friday, September 20, 2024

கடும் நிதிச்சுமையில் காமராஜர் பல்கலை., – முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

by rajtamil
Published: Updated: 0 comment 0 views
A+A-
Reset

கடும் நிதிச்சுமையில் காமராஜர் பல்கலை., – முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

மதுரை: கடும் நிதிச்சுமையிலுள்ள மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு கடந்தாண்டு தமிழக அரசின் உயர்கல்வித் துறை ரூ.58 கோடி வழங்கியது. ஆனால் இந்தாண்டு ரூ.8 கோடி மட்டுமே வழங்கியுள்ளது ஏற்புடையதல்ல. எனவே தமிழக முதல்வர் தலையிட்டு காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு நீதியும், நிதியும் வழங்க வேண்டும் என மதுரை எம்பி-யான சு.வெங்கடேசன் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு சு.வெங்கடேசன் இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: “மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் தமிழகத்தின் 2-வது பெரிய பல்கலைக் கழகம். சீரிய செயல்பாட்டிற்காக 2022ம் ஆண்டு யுஜிசி ஏ++ என்ற உயர் தர சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் வரம்பிற்கு உட்பட்ட 117 கல்லூரிகளில் 1,50,000 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் சமீப காலமாக, இப்பல்கலைக் கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாகச் சூழல், நிதி பற்றாக்குறையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக் கழகங்களும் தங்களது சொந்த, அரசு நிதி ஆதாரங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வருவாய் வீழ்ச்சி, தன்னாட்சி கல்லூரிகளின் வளர்ச்சியால் ஏற்பட்ட தேர்வு கட்டண இழப்பால் சொந்த நிதி ஆதாரங்கள் பலவீனமடைந்துள்ளன. பல்கலைக் கழகத்தில் 159 ஆசிரியர்கள் (காலிப்பணியிடம் 181), 231 நிர்வாக அலுவலர்கள் (காலிப்பணியிடம் 577) பணியாற்றி வருகின்றனர்.

இது தவிர, 1,181-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள், 393 தற்காலிக பணியாளர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் சொந்த நிதியிலிருந்து வழங்குவதால் நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசு கடந்தாண்டு ரூ.58 கோடி வழங்கியதில், நடப்பு நிதியாண்டில் வெறும் ரூ.8 கோடியாக குறைத்திருப்பது நிதி பிரச்சினை தீவிரமாகியுள்ளது. அரசு நிதி சுமார் ரூ.50 கோடி குறைத்ததால், இக்கல்வியாண்டில் 7 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம், ஓய்வூதியம் வழங்க முடிந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி, பல்கலை ஆசிரியர்கள் 5-வது நாளாக கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சூழலில், பல்கலைக் கழகத்திற்கான நிதி நெருக்கடியை சீர் செய்ய தமிழக அரசின் நேரடி தலையீடு அவசியம் எனக் கருது கிறேன். அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் ஆண்டு நிதித் தேவையை ஏற்றது போல், காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு ரூ.100 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும். தஞ்சை பல்கலைக் கழக ஓய்வூதியதாரர்களுக்கான நிதியை ஏற்றதுபோல, காமராஜர் பல்கலைக் கழக ஓய்வூதிய சுமையை அரசு ஏற்க வேண்டும்” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024