Friday, September 20, 2024

கடைசி டி20 போட்டி: பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி

by rajtamil
Published: Updated: 0 comment 20 views
A+A-
Reset

இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

ஓவல்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது போட்டியும் மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 23 ரன்கள், பாபர் அசாம் 36 ரன்கள், உஸ்மான் கான் 38 ரன்கள், இப்தார் அகமது 21 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் முறையே 45 ரன்கள் மற்றும் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகினர். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 20 ரன்களில் அவுட்டானார். இந்த நிலையில் 15.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜானி 28 ரன்களுடனும் ஹாரி புரூக் 17 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

You may also like

© RajTamil Network – 2024