Wednesday, September 25, 2024

கட்டப்பஞ்சாயத்து சர்ச்சை: லஞ்ச ஒழிப்புத்துறை பெண் ஆய்வாளர் வழக்கில் டிஜிபி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

கட்டப்பஞ்சாயத்து சர்ச்சை: லஞ்ச ஒழிப்புத்துறை பெண் ஆய்வாளர் வழக்கில் டிஜிபி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: கட்டப்பஞ்சாயத்து செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை பெண் ஆய்வாளரை முக்கியத்துவம் அல்லாத பதவிக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக டிஜிபி உள்ளிட்டோர் 4 வார காலத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது மருமகள் மற்றும் உறவினரான மற்றொரு பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ. 1.50 கோடியைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புதுக்கோட்டை மச்சுவாடியைச் சேர்ந்த எல்.என்.நித்யானந்தம் என்பவர் மீது மருத்துவர் ராமதாஸ் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு போலீஸில் புகார் செய்தார்.

அந்த புகாரின்பேரில் நித்யானந்தத்தை விசாரணைக்கு அழைத்த அப்போது புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த அனிதா ஆரோக்கியமேரி, நித்யானந்தத்திடம் கட்டப்பஞ்சாயத்து நடத்தி மருத்துவர் ராமதாஸூக்கு சாதகமாக எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து நித்யானந்தம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட ஆய்வாளரான அனிதா ஆரோக்கியமேரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், அனிதா ஆரோக்கிய மேரி தற்போது திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவரை முக்கியத்துவம் அல்லாத வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யக்கோரி நித்யானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக தமிழக டிஜிபி மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், சம்பந்தப்பட்ட பெண் ஆய்வாளர் உள்ளிட்டோர் 4 வார காலத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்.30-க்கு தள்ளி வைத்தார்.

You may also like

© RajTamil Network – 2024