கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: ட்ரூடோ கூறியது என்ன?

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

கனடாவில் ஹிந்து கோயிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருத்தம் தெரிவித்துள்ளார்.

கனடா எம்.பி.க்களான சந்திர ஆர்யா, கெவின் வூங், கனடா எதிர்க்கட்சித் தலைவர் பெய்ரி பொய்லிவெரெ உள்ளிட்டோர் ஹிந்து கோயில் மற்றும் மக்கள் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஹிந்து கோயிலில் நுழைந்து தாக்குதல்

கனடாவின் டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர் நேற்று (நவ. 4) தாக்குதல் நடத்தியுள்ளனர். கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கனடாவில் தூதரக முகாமிற்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிராம்ப்டன் பகுதியிலுள்ள ஹிந்து கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீது கொடிக்கம்பங்களைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்தப் போராட்டம் வன்முறைக் களமாக மாறியது. இது தொடர்பான விடியோ இணையத்தில் பரவியது.

இச்சம்பவத்துக்கு கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தூதரகப் பணிகளுக்காக உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி முன்பே உயர்மட்ட கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இத்தகைய வன்முறை ஏற்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ஹிந்து கோயில் மற்றும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஹிந்துக்களை காக்கத் தவறிவிட்டோம்

கனடாவில் உள்ள ஹிந்துக்களை பாதுகாக்க நம் நாட்டுத் தலைவர்கள் தவறிவிட்டதாக அந்நாட்டு எம்.பி., கெவின் வூங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஹிந்து கனடியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் முதல் தீவிரவாதிகள்வரை பாதுகாப்பான துறைமுகமாக கனடா மாறிவிட்டது. வன்முறையிலிருந்து ஹிந்து கனடியர்களை காப்பதிலிருந்து நம் தலைவர்கள் தவறிவிட்டனர். கிறிஸ்தவர்கள், யூதர்களும் இங்கு உள்ளனர். அனைவரும் அமைதியாக வழிபடத் தகுதியானவர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | ஈரானுக்கு ஐ.நா. எச்சரிக்கை! உள்ளாடை மட்டுமே அணிந்து போராடிய பெண்ணுக்கு பெருகும் ஆதரவு!

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024