கனடா மீது நம்பிக்கை இல்லை: தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றது இந்தியா!

by rajtamil
Published: Updated: 0 comment 1 views
A+A-
Reset

கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெறுவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியத் தூதருக்கு தொடர்பிருப்பதாக கனடா குற்றம்சாட்டியிருந்த நிலையில், கனடாவுக்கான தூதரை இந்தியா திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.

மேலும், எங்கள் தூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தற்போதைய கனடா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லை என்றும் கனடாவின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

நம்பிக்கை இழந்துவிட்டோம்

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''தீவிரவாதம் மற்றும் வன்முறையான சூழலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் துதர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் தற்போதைய கனடா அரசின் மீது நம்பிக்கை இல்லை. இதனால் தூதரக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மற்ற தூதர்களை இந்திய அரசு திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதம், வன்முறை மற்றும் பிரிவினைவாதத்திற்கு ட்ரூடோ அரசு அளித்து வரும் ஆதரவுக்கு பதில் நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்தியாவுக்கு உரிமை உள்ளது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஒத்துழைக்கத் தயார்

கனடா தூதர் ஸ்டீவர்ட் வீலர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது,

’’இந்தியத் தூதரக அதிகாரிக்கும் கனட குடிமகன் (ஹர்தீப் சிங் நிஜ்ஜார்) கொல்லப்பட்டதற்கும் உள்ள தொடர்பு குறித்த நம்பகமான மறுக்க முடியாத ஆதாரங்களை கனடா வழங்கியது. இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா தெளிவுபடுத்திப் பார்க்க வேண்டிய நேரம் இது. இது இரு நாடுகள் மற்றும் நாட்டு மக்களின் நலனுக்கு அவசியமானது. இந்தியாவுக்கு ஒத்துழைப்பு வழங்க கனடா தயாராக உள்ளது'’ எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பாபா சித்திக் வழக்கு: 3வது நபருக்கு அக். 21 வரை போலீஸ் காவல்!

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023 ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதனை இந்தியா மறுத்து வருகிறது. இதனால், இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்து வருகிறது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவுக்கு தொடர்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024