கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர்களை எழுத சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

புதுடெல்லி,

வட மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சிவ பக்தர்கள் 'கன்வார்' யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரையை மேற்கொள்பவர்கள் 'கன்வாரியாக்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். இந்த யாத்திரையின்போது ஹரித்வார், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பின்னர் அந்த புனித நீரைக் கொண்டு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வார்கள்.

இதனிடையே உத்தரபிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் வகையில் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு முஸ்லிம் வணிகர்களை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதேபோல உத்தரகாண்ட் மாநிலத்திலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, முஸ்லிம் வணிகர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடை உரிமையாளர்களின் பெயர்களை எழுதுவது தொடர்பாக உத்தரபிரதேச அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த பெயர்கள் எழுதும் முடிவு குறித்து 2 மாநில அரசுகளும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது. கன்வார் யாத்திரை இன்று தொடங்கிய நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் முஸ்லிம் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024