Saturday, October 26, 2024

கமலா ஹாரிஸ் Vs டிரம்ப்! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு?

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

அமெரிக்காவில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர், 5 ஆம் தேதியில் நடைபெறவுள்ளது.

நாட்டின் 60 ஆவது அமெரிக்க அதிபருக்கான இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும்தான் முதன்மையான போட்டி நிலவுகிறது.

இவற்றைத் தவிர மூன்றாவது மற்றும் சிறு, குறு கட்சிகளாக சுதந்திரவாதக் கட்சி, பசுமைக் கட்சி, அரசியலமைப்பு கட்சி, கூட்டணிக் கட்சி, வெர்மான்ட் முற்போக்கு கட்சி, ஃப்ளோரிடா சுதந்திரக் கட்சி, அமைதி மற்றும் விடுதலைக் கட்சி போன்றவையும் போட்டியிடுகின்றன.

யார் யாருக்குப் போட்டி?

ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். தொடக்கத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தற்போதைய அதிபர் ஜோ பைடன்தான் அறிவிக்கப்பட்டார்.

ஆனால், கடந்த ஜூன் 27 ஆம் தேதியில் தொலைக்காட்சியொன்றில் நேரலையாக அதிபர் ஜோ பைடனுக்கும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது, பலமுறை பேச வார்த்தைகள் கிடைக்காமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமல் பேசியது, அா்த்தமில்லாமல் பதிலளித்தது போன்ற ஜோ பைடனின் தடுமாற்றங்கள், அவரால் இந்தத் தோ்தலில் மக்களின் வாக்குகளைப் பெற முடியுமா என்ற கவலையை அவருடைய ஜனநாயகக் கட்சியினரிடையே ஏற்படுத்திவிட்டது.

கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப்

இதனையடுத்து, மறைமுகமாக நெருக்குதல்கள் உருவாகத் தொடங்கின. இந்த நிலையில் அவருடைய உடல்நிலையிலும் சின்னப் பிரச்சினை வர, தான் அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த அதிபர் ஜோ பைடன், சிகாகோவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் வருகிற அதிபர் தேர்தலின் வேட்பாளராகத் துணை அதிபர் கமலா ஹாரிஸை அறிவித்தார்.

காரசாரமான நேரடி விவாதம்

இந்த நிலையில், செப். 11 ஆம் தேதியில் கமலா ஹாரிஸுக்கும், டிரம்ப்புக்கும் இடையிலும் தொலைக்காட்சியொன்றில் காரசாரமான நேரடி விவாதமும் நடந்தது.

விவாதத்தில் டிரம்ப் பேசியதாவது: “அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். மோசமான குடியேற்றத்தால் அமெரிக்காவில் பணவீக்கம் ஏற்பட்டு பொருளாதாரம் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டது. கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சிஸ்ட். அவருடைய தந்தை ஒரு மார்க்சிஸ்ட், அதனால் அவரிடம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கான எந்தத் திட்டமும் இல்லை. ஜோ பைடனின் தவறான கொள்கைகளை கமலா ஹாரிஸும் பின்பற்றி வருகிறார்.

எனது ஆட்சிக் காலத்தில் 21 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் தற்போது 60, 70-லிருந்து 80 சதவிகிதத்துக்கும் அதிகமாகியுள்ளது. கடந்த 52 ஆண்டுகளாகவே கருக்கலைப்பு பிரச்னை ஒரு சிக்கலாக உள்ளது. செயற்கைக் கருத்தரிப்புக்கு நான் எதிரானவன் அல்ல. கருக்கலைப்புக்கு எதிரானது எனது நிலைப்பாடு; இருந்தாலும் மக்களின் கருத்துப்படி செயல்படுவேன். கமலா ஹாரிஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகும். நான் ஆட்சியில் இருந்திருந்தால் காஸாவில் போர் நடந்திருக்காது’’ என்று கூறியிருந்தார்.

ஃபிலடெல்பியா நகரில் நகரில் நடந்த விவாதத்தின்போது..

இதனைத் தொடர்ந்து, கமலா ஹாரிஸ் “அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்தவர் டிரம்ப். வர்த்தகப் போரை அறிமுகப்படுத்தியவர் டிரம்ப்தான். அவரது ஆட்சிக்காலத்தில் சுகாதாரமும், பொருளாதாரமும் மோசமாக இருந்தது. அமெரிக்காவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு திறமையான, சரியான தலைவர் தேவைப்படுகிறார். டிரம்ப்பே ஒரு குற்றவாளிதான். ஆனால், அவர் குற்றவாளிகள் குறித்து பேசுவது வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. டிரம்ப் மீண்டும் அதிபரானால் அவர் மீதான வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார்.

பெண்ணின் உடல் தொடர்பாக அவரைத் தவிர மற்றவர்கள் முடிவெடுக்க அனுமதிக்கக் கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்புக்கு ஆதரவாக இருப்போம். டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் தேசிய கருக்கலைப்பு கொள்கையைக் கொண்டு வந்துவிடுவார். இவர் மீண்டும் அதிபரானால் நாடு தாங்காது என இவருடன் பணியாற்றிய அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.

விவாதத்துக்கு மறுத்த டிரம்ப்!

அதுமட்டுமின்றி, மற்றொரு விவாதத்துக்கு டிரம்ப்புக்கு கமலா ஹாரிஸ் அழைப்பு விடுத்த நிலையில், தோல்வி அடைந்தவர்களே மீண்டும் வாய்ப்புக் கேட்பார்கள் என்று கூறி, டிரம்ப் மறுத்துவிட்டார்.

டிரம்ப் மீதான கொலை முயற்சிகள்

இதற்கிடையில், டிரம்ப் மீது 3 முறை கொலை முயற்சி சம்பவங்களும் நிகழ்ந்தன. பென்சில்வேனியாவில் ஜூலை மாதம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, முதல்முறையாக துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில், அவரது காதில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவரைக் கொல்ல முயற்சித்தவரை அமெரிக்க ரகசிய காவல் அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

இரண்டாவது முறையாக, ஃபுளோரிடா மாகாணத்தில் தனது கோல்ஃப் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தபோது, டிரம்ப்பை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில், காயமின்றி டிரம்ப் தப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கோசெல்லாவில், அக். 12 ஆம் தேதியில் டிரம்ப் பங்கேற்ற பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்ட நுழைவு வாயிலில் கருப்பு நிற காரில் வந்த 49 வயதுடைய வெம் மில்லர் என்ற நபரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், போலி நுழைவுச் சீட்டு முதலானவற்றைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் படையினர் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மில்லர், முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றும், வலதுசாரி அரசாங்கத்தின் எதிர்ப்புக் குழுவினை சார்ந்தவராக இருக்கக் கூடும் என்றும் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் பொதுக் கூட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் பாதுகாப்புத் துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொனால்ட் டிரம்ப்

தேர்தலில் எலான் மஸ்க் பங்களிப்பு?

குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப்பை, உலகப் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் தீவிரமாக ஆதரித்து வருகிறார். அதிபர் தேர்தலில் டிரம்ப்பை வெற்றிபெற வைப்பதற்காக, எலான் மஸ்க் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், டிரம்ப்பை ஆதரிக்கும் விதமாக சுமார் 75 மில்லியன் டாலர் (ரூ. 630.5 கோடி) வரையில் குடியரசுக் கட்சிக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இதன் மூலம் குடியரசுக் கட்சியின் பெரிய நன்கொடையாளராக எலான் மஸ்க் திகழ்கிறார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரையில், தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 8 கோடி) பரிசும் வழங்குகிறார் எலான் மஸ்க். துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி படிவங்களில் கையொப்பம் வாங்கும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். அதன்படி, தேர்தல் நடக்கும் நவம்பர் 5 வரையில், இந்தப் படிவத்தில் கையெழுத்திடும் நபர்களில் தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

முன்னதாக டிரம்ப், “நான் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், எலானுக்கு அமைச்சர் பதவி அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவி அளிப்பேன்’’ என்று அறிவித்திருந்தார். அவர் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், “நான் சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்’’ என தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்புடன் எலான் மஸ்க்…

கமலா ஹாரிஸுக்கு எதிரான எலான் பதிவுகளாக..?

இதுதவிர, கமலா ஹாரிஸை ஆதரித்த பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்டையும் எலான் மஸ்க் விமர்சித்திருந்தார். அதாவது, “நீங்கள் வெற்றி பெற்றால், நான் உங்களுக்கு ஒரு குழந்தையைத் தருவேன். மேலும், உங்கள் பூனைகளையும் எப்போதும் பாதுகாப்பேன்" என்று எலான் கூறினார்.

மேலும், பென்சில்வேனியாவில் செப். 16 ஆம் தேதியில் தேர்தல் பரப்புரையின்போது, டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த எலான் மஸ்க், “ஜோ பைடனையோ கமலா ஹாரிஸையோ கொல்ல யாரும் முயற்சிகூட செய்யவில்லை’’ எனப் பதிவிட்டிருந்தார். எலானின் இந்த பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அதற்கு எதிரான கண்டனங்களும் கிளம்பின.

இதனைத் தொடர்ந்து, “நாட்டில் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை. இந்த சம்பவம் மேலும் நடக்காமல் இருக்க நாம் அனைவரும் நம் பங்கைச் செய்ய வேண்டும். வன்முறையை மட்டுமே கண்டிக்க வேண்டும். ஒருபோதும் ஊக்குவிக்கவோ அல்லது கேலி செய்யவோ கூடாது. இந்தப் பதிவு முற்றிலும் பொறுப்பற்றது’’ என வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, அந்தப் பதிவை நீக்கிய எலான் மஸ்க், இதனை தான் வேடிக்கையாக சொன்னதாகவும் தெரிவித்தார்.

கமலா ஹாரிஸுக்கு ஆதரவுகள்

கடந்த 1776 ஆம் ஆண்டு அமெரிக்கா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த 248 ஆண்டுகளில், ஒரு பெண்கூட அமெரிக்க அதிபர் ஆனதில்லை. இந்தத் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், அவரே அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகத் திகழ்வார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் கமலா ஹாரிஸுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் ஆளுங்கட்சியான தொழிலாளா் கட்சியின் செயல்பாட்டுத் தலைவா் சோஃபியா படேல் அண்மையில் வெளியிட்டிருந்த சமூக ஊடகப் பதிவில், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகத் தானும் தனது கட்சி சகாக்களும் பிரசாரம் மேற்கொள்வார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது, அமெரிக்காவில் மிகப்பெரிய சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் மூலம் பிரிட்டன் ஆளுங்கட்சி அமெரிக்க தோ்தலில் தலையீடு செய்வதாக டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். அதையடுத்து, தனது சமூக ஊடகப் பதிவை சோஃபியா படேல் நீக்கிவிட்டார்.

அதுமட்டுமின்றி, தெற்கு கரோலினாவை சேர்ந்த குடியரசு கட்சியைச் சேர்ந்த லின்ட்சே கிரகாம், தனது ஆதரவை டிரம்ப்புக்கு வழங்காமல், எதிர்த் தரப்பான கமலா ஹாரிஸுக்கு வழங்கியுள்ளார். லின்ட்சே கிரகாம் குடியரசு கட்சியின் மிகவும் பிரபலமான நபர். இவர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு கொடுத்துள்ளதால், டொனால்ட் டிரம்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக டிரம்ப் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், டிரம்ப்பின் கொள்கையை எதிர்க்கும் சிலரும் கமலா ஹாரிஸை ஆதரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

கமலா ஹாரிஸுக்கு பில்கேட்ஸ் ஆதரவு?

அரசியல் தலைவர்களுடனான தொடர்பில் இருந்து விலகியிருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு 50 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளதாக பில்கேட்ஸுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பில்கேட்ஸ், நன்கொடை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்தத் தேர்தல் வித்தியாசமானது என்றும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதாரக் கொள்கைகள், குடும்பக் கட்டுப்பாடு, உலகளாவிய சுகாதாரத் திட்டங்கள் பற்றிக் கவலை தெரிவித்துள்ளார். “ஆனால், நான் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் வேட்பாளர்களை ஆதரிக்கிறேன்’’ என்றும் கூறியுள்ளார்.

பில்கேட்ஸின் முன்னாள் மனைவி, மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸும், கமலா ஹாரிஸை ஆதரிக்கும் பிரசாரக் குழுக்களுக்கு அதிகளவில் நன்கொடைகளை வழங்கியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைக் கோவை வெளியாகியிருக்கிறது. கமலா ஹாரிஸின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவாக இந்த 30 நிமிட இசைக் கோவை காணொலியை ஏ.ஆர். ரஹ்மான் பதிவு செய்துள்ளார்.

கருத்துக் கணிப்புகள்

அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ள நிலையில், இவற்றில் குறிப்பிட்ட சில மாகாணங்கள் எப்போதும் ஜனநாயகக் கட்சிக்கே வாக்களிக்கும்; சில மாகாணங்கள் எப்போதும் குடியரசுக் கட்சிக்கே வாக்களிக்கும். இடைப்பட்ட சில மாகாணங்கள்தான் பெரும்பாலும் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதாக இருக்கின்றன. இந்த மாகாணங்களில் யார் வெல்வார்களோ அவர்களே ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புகள் அதிகம். இந்த மாகாணங்களின் ஆதரவு இருவரில் யாருக்கு சாதகமாக அமையப் போகிறது என்பதற்கான பதில், தேர்தல் முடிவுகளில்தான் தெரியும்.

கடந்த 10 அமெரிக்க அதிபர் தேர்தல்களில் 9 தேர்தல்களைத் துல்லியமாகக் கணித்த பிரபல வரலாற்றாசிரியரான ஆலன் லிக்ட்மேன், இந்தத் தேர்தலைப் பற்றியும் கணித்துள்ளார். “இந்த முறை தேர்தலில் பெரிய சர்ப்ரைஸ் இருக்காது. பலரும் கமலா ஹாரிஸ் வெல்வார் என்று நினைக்கிறார்கள்; அதுதான் நடக்கவும் போகிறது’’ என்று ஆலன் லிக்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு 45 சதவிகிதம் பேரும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புக்கு 42 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பொருளாதார சிக்கல்களைத் தீர்ப்பதற்கு டிரம்ப்தான் சரியான நபர் என 45 சதவிகிதம் பேரும், கமலா ஹாரிஸை 40 சதவிகிதம் பேரும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

தி வாஷிங்டன் போஸ்ட் நடத்திய கணிப்பில், கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் என இரு தரப்பிற்கும் தலா 47 சதவிகிதம் மக்கள் ஆதரவளித்துள்ளதாகக் கூறியுள்ளது. ஃபைவ் தேர்ட்டி எய்ட் கணிப்பில், டிரம்ப் வெல்ல 51 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாகவும், கமலா ஹாரிஸுக்கு 49 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

30 வயதுக்கு குறைவான இளம் வாக்காளர்களில் 55 சதவிகிதம் பேர் கமலா ஹாரிஸுக்கும், 38 சதவிகிதம் பேர் டிரம்ப்புக்கும் ஆதரவாக உள்ளனர்; 12 சதவிகிதம் வாக்காளர்கள், இன்னும் தங்களால் ஒரு முடிவை எடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

டொனால்ட் டிரம்ப்

டிரம்ப் சதித்திட்டம் தீட்டுகிறார்?

2020 ஆம் ஆண்டு தேர்தலிலேயே முன்னாள் அதிபர் டிரம்ப் தோல்வியுற்றபோது, தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் குற்றஞ்சாட்டி வன்முறையைத் தூண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும்கூட நடந்தன; அந்த நாளை அமெரிக்காவின் கறுப்பு நாளாகவே கருதுகின்றனர். இந்த முறையும் தேர்தலில் டிரம்ப் தோல்வியுற்றால், வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றனர்.

கடும் போட்டி நிலவும் 6 முதல் 7 மாகாணங்களில் வன்முறை வெடிக்க வாய்ப்பு இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை தாமதமாகும் மாகாணங்களில், தாமதத்தைச் சுட்டிக்காட்டி, மோசடி நடந்ததாகக் குழப்பத்தை ஏற்படுத்த அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் திறன்கொண்ட அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், உலகின் பிற நாடுகளைப் பொருத்தவரை அமெரிக்கா என்ற நாட்டின் நிரந்தரமான கொள்கையில் பெரியளவிலான மாற்றம் இருக்காது என்றாலும் அவர்களின் அணுகுமுறையிலும் அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்விலும் நிச்சயம் பிரதிபலிக்கும்.

பார்க்கலாம், நவ. 5 ஆம் தேதி அமெரிக்க மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று!

– மோ. சக்திவேல்

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024