Tuesday, September 24, 2024

கருணாநிதி நாணயம் வெளியீடு – மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா வருகிற 18-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

நூற்றாண்டு நாயகராம் நம் உயிர்நிகர் தலைவர் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை என்றென்றும் நம் உள்ளத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம். எந்நாளும் நம் இல்லத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம். அரை நூற்றாண்டுகாலம் தி.மு.கழகத்தைக் கட்டிக்காத்து, பேரியக்கமாக வளரச் செய்த தலைவர் கலைஞருக்குக் கழகத்தின் சார்பில் தலைமைக் கழகம் தொடங்கிக் கிளைக் கழகங்கள் வரையிலும் கொண்டாட்டம்தான்!

ஐந்து முறை முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று அரிய பல திட்டங்களால் நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்டங்கள்தோறும் கொண்டாட்டங்கள். இன்னும் கலையுலகினர், படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ, எவ்விடமெல்லாம் தமிழர்களும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் மத்திய அரசின் சார்பில் ஆகஸ்ட் 18 ஞாயிறு மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சீர்மிகு விழாவில்மத்திய அரசின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அவர்கள் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தினை வெளியிடவிருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் எதிலும் உறுப்பினராக இருந்திராத ஓர் அரசியல் தலைவரின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதென்றால் அது நம் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவின்போதுதான். 95 ஆண்டுகால வாழ்க்கையில் 81 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான கலைஞரின் அரசியல், நிர்வாகம் , கலை , இலக்கியம் , திரைத்துறை , இதழியல் என பன்முகச் சாதனைகள் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவருடைய திறமை எல்லை கடந்த வரவேற்பைப் பெற்றவை. அதற்குக் காரணம், தலைவர் கலைஞரின் அத்தனை பங்களிப்புகளிலும் முதன்மை நோக்கமாக இருந்தது

தமிழாகவே வாழ்ந்த தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டின் நினைவாக வெளியிடப்படும் 100 ரூபாய் நாணயத்தில் முத்தமிழறிஞரின் உருவத்துடன் அவர் கையெழுத்திலான, 'தமிழ் வெல்லும்' என்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன. இமயத்தின் உச்சியில் கொடிநாட்டி, தமிழின் பெருமையை உயரச் செய்த சேரன் செங்குட்டுவனை வரலாறு பேசுவது போல, மத்திய அரசு தனது நினைவாக வெளியிடும் நாணயத்தில் தமிழைப் பொறித்து நம் தாய்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கலைஞர்.

தமிழ்நாட்டின் அரசியலை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் இயக்கிய ஆற்றல் மிக்கவராகவும், இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவம் மிக்க ஆளுமையாவும் திகழ்ந்தவர் கலைஞர். எதிர்காலத் தலைமுறையினரின் கலங்கரை விளக்கமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற மத்திய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும்,கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ஒருவனாக உரித்தாக்குகிறேன்.

இனிமை மிகுந்த தமிழைத் தன் நாணயத்தால், கேட்போர் செவிகளுக்கெல்லாம் விருந்தளித்த தலைவர் கலைஞர், நாணயத்திலும் 'தமிழ் வெல்லும்' என்பதை நிறுவியிருக்கிறார். இமயம் போல உயர்ந்து நிற்கும் கலைஞரின் புகழுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் நாணய வெளியீட்டு விழாவில் உடன்பிறப்புகளைக் காண ஆவலாக இருக்கிறேன். இனிய விழா எனினும் எளிய விழா என்பதால் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சார்ந்த உடன்பிறப்புகள் நேரில் காணவும், தமிழ்நாட்டிலும், தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் நேரலையில் காணவும் அன்புடன் அழைத்து அகம் மகிழ்கிறேன். என தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024