கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து மரியாதை செலுத்திய கனிமொழி

by rajtamil
0 comment 45 views
A+A-
Reset

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி அபார வெற்றி பெற்றார்.

சென்னை,

நட்சத்திர அந்தஸ்து பெற்ற தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., அ.தி.மு.க. சார்பில் சிவசாமி வேலுமணி, பா.ஜனதா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயசீலன், நாம் தமிழர் சார்பில் ரொவினா ரூத் ஜேன் உள்பட 28 வேட்பாளர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் நேற்று வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. அனைத்து சுற்றுகள் முடிவில் கனிமொழி 5,40,729 ஓட்டுகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,47,991 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கனிமொழி 2-வது முறையாக வாகை சூடினார்.

வெற்றி பெற்ற கனிமொழிக்கு தேர்தல் அதிகாரியான கலெக்டர் லட்சுமிபதி சான்றிதழ் வழங்கினார். கனிமொழி எம்.பி.யை தவிர அ.தி.மு.க., த.மா.கா., நாம் தமிழர் கட்சி உள்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி எம்.பி. வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

You may also like

© RajTamil Network – 2024