Monday, September 23, 2024

கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் வீடுகளுக்கு அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ராய்ச்சூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிராம மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே டெங்கு காய்ச்சல் பரவல் கர்நாடகத்தில் வேகமெடுத்துள்ளது. கர்நாடகத்தில் ஒட்டுமொத்தமாக 15 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலியாகி உள்ளனர். இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எனினும் டெங்கு பாதிப்பு உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் கர்நாடகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் ஹாசன் மாவட்டத்தில் 4 குழந்தைகள் பலியான நிலையில், தற்போது பெங்களூருவில் டெங்கு பாதிப்பால் ககன் என்ற 11 வயது சிறுவன் பலியாகி உள்ளான். பெங்களூரு அருகே அஞ்சனாபுராவை சேர்ந்த தம்பதியின் மகன் ககன். இந்த சிறுவனுக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக சிறுவனுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை கொடுக்கப்பட்டது.

எனினும் சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் சிறுவனின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு திடீரென சிறுவன் ககன் உயிரிழந்தான். இதுகுறித்து அறிந்த சுகாதார துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது டெங்கு பாதிப்பு தீவிரம் அடைந்த நிலையில் சிறுவன் ககன் உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து கர்நாடகாவில் டெங்கு பாதிப்பால் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 200-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024