Monday, September 23, 2024

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

மைசூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதுபோல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 100.90 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,185 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 554 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும்.

அதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே கபிலா ஆற்றின் குறுக்கே உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 5,509 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 2,284 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2,281.32 அடியாக இருந்தது.

இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் மொத்தம் வினாடிக்கு 4,554 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இவ்விரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 3,463 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.அது நேற்று வினாடிக்கு 4,554 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024