Saturday, September 28, 2024

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் எனும் கே.ஆர்.எஸ்., மைசூருவில் உள்ள கபினி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தொடர் மழையால் இரு அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. கடந்த வாரம் இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமாகவும், மிதமாகவும் மாறி மாறி பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது. அதன்படி அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலை ஒரு லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1.40 லட்சமாக அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024