Wednesday, September 25, 2024

கலசத்தின் முன்பாக அம்பிகை!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

கலசத்தின் முன்பாக அம்பிகை!

இலக்கிய மேகம் நா. ஸ்ரீநிவாஸன்

ராமாயண காலத்தில் தேவர்கள் வாழ்ந்ததால் "தேவகோட்டை' எனவும், சண்டாசுர வதத்தின்போது தேவி கோட்டை கட்டி வாழ்ந்ததால் "தேவி கோட்டை' எனவும் அழைக்கப் பெற்றது. பின்னர், "தேவகோட்டை' என மருவியது என்பார்கள்.

தமிழும் சைவமும் தழைத்தினிதோங்கும் தேவகோட்டையை காவல் தெய்வமாக இருந்து காத்து வருகிறாள் பராசக்தி ஸ்ரீ கோட்டை அம்மன். தேவகோட்டை நகர எல்லையில் தனிக் கோயிலில் அருளாட்சி செய்து வரும் அம்பிகையை ஆடி மாதத்தில் கொண்டாடி வழிபாடு செய்கின்றனர். இதற்காக, தேவகோட்டை நகரத்தார்கள் ஒரு கலச நீரில் அம்பிகையை எழுந்தருள செய்து பதினைந்து நாள்கள் உலகமே போற்றும் வகையில் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர்.

ஆடி முதல் திங்கள்கிழமையன்று மேடை போடுதல் என்னும் மங்கல நிகழ்வு நடைபெறும். அப்போது ஒரு தற்காலிக கோயிலில் ஒரு மேடை அமைத்து அதன் மேலே ஒரு குடத்தில் நீரில் அம்பிகையை பிரார்த்தித்து எழுந்தருளச் செய்வார்கள். அந்த தூய இடத்தில் முளைப்பாரியும் வளர்ப்பார்கள். அந்தக் கலசத்தின் முன்பாக வெள்ளியிலான அம்பிகையின் திருவுருவத்தை எழுந்தருளச் செய்து பதினைந்து நாள்களும் விசேஷமான அலங்காரங்களைச் செய்து வழிபாடுகள் நடைபெறும்.

கோயில் முகப்பில் உள்ள பலிபீடத்துக்கு காலை, மாலை என இரு வேளைகளும் திறப்பு, அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமைகளில் விசேஷமான பொங்கல் வைக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

செட்டிநாட்டில் திருமணமானவர்களுக்கு "புள்ளி' என்று பெயர். ஒவ்வொரு திருமணமான தம்பதியருக்கும் கட்டாயமாக இரண்டாம் செவ்வாய்க்கிழமை பொங்கல் வைப்பதால் இந்நிகழ்வுக்கு "புள்ளிப்பொங்கல்' என்ற பெயர் உண்டாயிற்று. இரண்டாம் செவ்வாய்க்கிழமை மதியம் நல்ல நேரத்தில் கோயிலில் பொங்கல் வைத்த பின்னர் ஆயிரக்கணக்கான பெண்கள் கோயிலின் முன்னும் பின்னும் பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் காட்சி மெய்சிலிர்ப்பான ஒன்றாகும்.

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை காலையில் நகரச் சிவன் கோயிலில் இருந்து ஆண்களும், பெண்

களும் பால்குடம் சுமந்து வந்து அம்பிகைக்கு அபிஷேகம் செய்யும் காட்சி சிறப்பானது. அதே நாளில் மாலை 6 மணிக்கு பூத்தட்டு எடுத்து வந்து பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும்.

இரண்டாவது வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை மங்களகரமாக நடைபெறும். தொடர்ந்து வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் மூன்றாவது பொங்கல் வைத்து மறுநாள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் தீர்த்தத்தில் எழுந்தருளச் செய்த அம்பிகையையும், முளைப்பாரியையும் ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்கிட சுமந்து வந்து அருகில் உள்ள ஊருணியில் உள்ள தீர்த்தத்தோடு அம்பிகையை நீரில் வைக்கும் சுப நிகழ்வு நடைபெறும்.

மேடை அமைத்தவுடனேயே ஆண்டுதோறும் ஊரில் மழை பெய்யும் அதிசயம் இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த பதினைந்து நாள்களும் ஊர் எல்லைக்குள் மாமிசம் விற்பனை செய்வது கிடையாது. மாற்று மதத்தவர்கள் கூட ஊர் எல்லை தாண்டியே மாமிசக் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வர்.

இந்த நாள்களில் தினசரி காலை தொடங்கி இரவு முழுவதுமாக ஆண்களும் பெண்களும் ஆயிரத்தெட்டு முறை வலம் வருவார்கள்.

இளநீரை கண் திறந்துவைத்து வழிபாடு செய்வார்கள். மாவிளக்கு வைத்து வழிபாடு செய்வார்கள் உடல் பாகங்களை வெள்ளியில் செய்து (உருவாரம்) படைத்து நோய் நீங்கிட வழிபாடு செய்கிறார்கள். வீடு கட்ட பிரார்த்தனை செய்வோர் வீடு போன்ற அமைப்பையும், வெளிநாடு செல்ல விரும்புவோர் ஆகாய விமானம் போன்ற அமைப்பையும் வைத்து வழிபாடு செய்வது சமீபத்தில் அதிகமாக உள்ளது.

செட்டிநாட்டில் திருமாங்கல்யமான கழுத்துரு படைத்து திருமணம் நடைபெற பிரார்த்தனை செய்கின்றனர். இவர்களின் பிரார்த்தனை ஓராண்டுக்குள் நிறைவேறி அடுத்த ஆண்டு நன்றி செலுத்த வழிபாடு செய்கின்றனர்.

இந்த ஆண்டு ஆடி 6} ஆம் தேதி (ஜூலை 22) தொடங்கி பதினைந்து நாள்கள் ஸ்ரீகோட்டையம்மன் அருள் பாலிக்க எழுந்தருளி வருகின்றாள்.

You may also like

© RajTamil Network – 2024