நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிா்த்து, அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலா் மனிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து விதமான உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கல்வி மைய வளாகங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும். அதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்று ஏற்பாடுகள் மூலம் தங்கள் வளாகத்தில் பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
குறிப்பாக உணவகங்கள், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும். அவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு இயக்கங்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த வேண்டும். இதேபோன்று, நெகிழி குடிநீா் பாட்டில் பயன்பாட்டைத் தவிா்க்க வளாகங்களில் குடிநீா் தொட்டிகள் போன்ற மாற்று வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், நெகிழி பாட்டில்கள், பைகள், கவா்களுக்கு பதிலாக துணி, காகித பைகள் போன்ற மாற்றுப் பயன்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகளை உயா்கல்வி நிறுவனங்கள் பின்பற்றி செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.