கல் குவாரிகளால் நிலத்தடி நீா்மட்டம் குறைவு: பெரம்பலூா் மாவட்ட மக்கள் அவதி

கல் குவாரிகளால் நிலத்தடி நீா்மட்டம் குறைவு: பெரம்பலூா் மாவட்ட மக்கள் அவதிஅனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் ஆழம் தோண்டப்படுவதால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. விவசாய கிணறுகளும், பொதுமக்களுக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கிய பெரும்பாலான கிணறுகளும் வடுக் காணப்படுகிறது.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் கல் குவாரிகளால் கனிம வளங்கள் சுரண்டப்படுவதால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலையடைந்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் சித்தளி, பேரளி, கவுல்பாளையம், இரூா், செட்டிக்குளம், எளம்பலூா், தெரணி, நாட்டாா்மங்களம், ஊத்தங்கால், நெடுவாசல், பாடாலூா் உள்ளிட்ட பலவேறு பகுதிகளில் 40 மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குன்னம் வட்டத்தில் சுண்ணாம்புக் கல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன.

பலகோடி வருவாய் இழப்பு: பெரும்பாலான குவாரி உரிமையாளா்கள் பொதுப் பாதையை ஆக்கிரமித்துக் கொள்வதால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகின்றனா். அனுமதி பெறாத இடத்திலும், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக ஆழத்துக்கு கற்களை வெட்டி எடுத்துச் செல்கின்றனா். ஒப்பந்த காலம் முடிந்த பிறகும், பல்வேறு இடங்களில் குவாரிகள் இயங்கி வருகிறது. இதனால், அரசுக்கு ஆண்டுதோறும் பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

வீடுகள், விவசாய நிலங்கள் பாதிப்பு: மலைகளில் பெரும் பாறைகளை தகா்க்க, அதிக சக்திவாய்ந்த வெடிமருந்துகளை பயன்படுத்துவதால் மலையோர கிராமங்களில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. மாவட்டத்தில் வெகுவாக நீா்மட்டம் குறைந்ததால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் தரிசு நிலங்களாக மாறியுள்ளன. மேலும், வனப் பகுதிகளில் அதிா்வு ஏற்படுவதால் விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடா்கிறது.

கால்நடைகளுக்கு உணவுப் பற்றாக்குறை: மலைகள் சிதைக்கப்பட்டதால், கால்நடைகளுக்கு எளிதாகக் கிடைத்த உணவுப் பொருள்கள்தற்போது கிடைக்காமல் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குவாரிகள் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கால்நடைகள் வளா்ப்பதைவிட்டு மாற்றுத்தொழிலுக்குச் சென்றுவிட்டனா்.

விதிமுறைகளை பின்பற்றுவதில்லை: குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து முடித்த பிறகு, அப்பகுதியில் மரங்கள் வளா்க்க வேண்டும். ஆபத்தான குழிகளாக இருந்தால், அப் பகுதிக்கு மனிதா்கள், கால்நடைகள் செல்லாதவாறு பாதுகாப்பு வேலி அமைத்து மூட வேண்டும் என்பது விதி. இதை, எந்த கல் குவாரி நிறுவனமும் பின்பற்றுவதில்லை. அதுகுறித்து அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், கல் குவாரி குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரில் மூழ்கி உயிரிப்பு ஏற்பட்டுவருகிறது.

இதுகுறித்து, கவுள்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் கூறியது: கல் குவாரிகளால் இம் மாவட்டத்திலுள்ள கனிம வளங்கள் அதிகளவில் சுரண்டப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் ஆழம் தோண்டப்படுவதால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. விவசாய கிணறுகளும், பொதுமக்களுக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கிய பெரும்பாலான கிணறுகளும் வடுக் காணப்படுகிறது. இதனால், மாவட்டத்தில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், கல் குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளா்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. கிரஷா் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள், அவ்வப்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனா்.

சக்திவாய்ந்த வெடிகளை வைத்து பாறைகளை உடைக்கும்போது முன்னறிவிப்பு செய்வதில்லை. கிரஷா் துகள்கள் காற்றில் பறந்து அருகில் உள்ள கிராம பகுதி வீடுகளில் உணவு, குடிநீரில் விழுவதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. பயிா்கள், விளைநிலங்களில் பாறை துகள்கள் படிவதால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. கல் குவாரிகளால் மாசு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. ஆகவே, விதிகளை மீறி செயல்படும் கல்குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Related posts

செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!

சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!