Tuesday, September 24, 2024

களைகட்டும் விநாயகர் சதுர்த்தி – பாதுகாப்பு பணியில் 64 ஆயிரம் போலீசார்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

சென்னை,

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னையில் 1,519 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 64 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் காவல்துறை பாதுகாப்பு ஒத்திகைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

விநாயகர் சதுர்த்தி காரணமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் விலை நேற்று கடுமையாக உயர்ந்தது. அதே போல் தூத்துக்குடி காய்கறி சந்தையில் வாழை இலைகளின் விலை பல மடங்கு உயர்ந்து ஒரு கட்டு 6 ஆயிரத்து 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

சத்தியமங்கலத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அழகிய விநாயகர் சிலைகள் 300 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டன. சேலத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் 30 நிமிடங்களில் களிமண்ணால் ஆன 750 விநாயகர் சிலைகளை செய்து கவனம் ஈர்த்தனர்.

இதனிடையே விநாயகர் சதுர்த்தி மற்றும் பொது விடுமுறையையொட்டி ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். இதனால் கோயம்பேடு மதுரவாயல் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும் எனவும், பொது இடத்தில் வைக்கப்படும் சிலைகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பாதுகாப்பு போடப்படும் எனவும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024