கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட எல்லையோர கிராமங்களில் 15 சிறுவர்கள் உட்பட 20 பேரை வெறிநாய் கடித்தது

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட எல்லையோர கிராமங்களில் 15 சிறுவர்கள் உட்பட 20 பேரை வெறிநாய் கடித்தது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி-கடலூர் மாவட்ட எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 15 சிறுவர், சிறுமிகள் உட்பட 20 பேரை வெறிநாய் கடித்தது. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த வி.மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று இயற்கை உபாதைக்காக வெளியே சென்றபோது, அங்கிருந்த செந்நிற நாய் ஒன்று, அவர்களை விரட்டிக் கடித்துள்ளது.

இதில், சின்னம்மாள்(86), பாப்பா(60), லட்சுமி(65), தர்ஷன்(6,) சித்ரா(20), லட்சுமணன்(13) மற்றும் சின்னதுரை (30) ஆகியோர் பாதிக்கப்பட்டு சின்னசேலம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நாய் வி.மாமந்தூர் கிராமத்தை ஒட்டிய, கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பனையாந்தூர் கிராமத்தில் நுழைந்து, அங்குதெருவில் விளையாடிக் கொண்டிருந்த யாழினி (8), யோகேஸ்வரி(7), ஹரிஷ்(7), புகழ் (10), காவ்யா (8)உள்ளிட்டவர்களை விரட்டிக் கடித்தது. மேலும், பீதியடைந்து ஓடிய சிலரையும் நாய் விரட்டிச் சென்று கடித்துள்ளது.

இதில் அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் கை, கால், முகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 15 பேர் சின்னசேலம் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நைனார்பாளையம் அரசு மருத்துவமனையில் 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாய் கடித்து காயமடைந்து, சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றியக் குழுத் தலைவர் சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் அன்புமணி மாறன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அரசின் நிவாரணத் தொகுப்புகளை வழங்கினர்.

You may also like

© RajTamil Network – 2024