Saturday, September 21, 2024

கள்ளக்குறிச்சி: சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்

by rajtamil
0 comment 32 views
A+A-
Reset

கல்வராயன் மலையில் சாராயம் தயாரிக்கும் ஊறல்களை அழிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடா்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில், கல்வராயன் மலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பட்டாலியன் போலீசார் உள்ளிட்ட போலீசார், சாராயம் தயாரிக்கும் ஊறல்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வராயன் மலையில் முகாமிட்ட சாராய வியாபாரிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பட்டாலியன் போலீசார் ஏழு பேர் மாயமாகியுள்ளனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் வழிமாறி சென்றிருக்கலாம் என சக போலீசார் தெரிவித்துள்ளனர். தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் இருந்த 20 போலீசாரில் 13 பேர், உணவு சாப்பிட, வனப்பகுதியை விட்டு வெளியேறினர். மீதமுள்ள 7 போலீசாரும் 2 மணி நேரத்திற்கும் மேலாகியும் வெளியே வராததால் போலீசார் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் மாயமான 7 போலீசாரை சக போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

You may also like

© RajTamil Network – 2024