கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்து நிர்க்கதியான குழந்தைகள்!

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

கள்ளச்சாராயத்தால் பெற்றோரை இழந்து நிர்க்கதியான குழந்தைகள்! கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயத்துக்கு தாய், தந்தை உயிரிழந்ததால், ஆதரவற்று நிர்க்கதியாய் தவிக்கும் நிலைக்கு மூன்று குழந்தைகள் தள்ளப்பட்டனர்.கோப்புப் படம்கோப்புப் படம்RAM

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயத்துக்கு தாய், தந்தை உயிரிழந்ததால், ஆதரவற்று நிர்க்கதியாய் தவிக்கும் நிலைக்கு மூன்று குழந்தைகள் தள்ளப்பட்டனர்.

தமிழகத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய சம்பவங்களுள் ஒன்றாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி காவல் நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதியிலுள்ள கருணாபுரம் பகுதியில் ஜூன் 18}ஆம் தேதி துக்க நிகழ்வுக்கு வந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில், 148 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் கருணாபுரம், கள்ளக்குறிச்சி நகரப் பகுதி, மாதவச்சேரி, சேஷசமுத்திரம், சிறுவங்கூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இதிலும், அதிகபட்சமாக 31 பேர் கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள்.

நிர்க்கதியாய் மூன்று குழந்தைகள்: இந்த துக்கத்திலும் பெரும் துயரமாகக் கருதப்படுவது பெற்றோரை இழந்து தவிக்கும் ஒரு சிறுமி, 2 சிறுவர்கள் நிலைதான். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சேர்ந்த வண்ணம் தீட்டும் தொழிலாளி ரமேஷ், அவரது மனைவியான கூலித் தொழிலாளி வடிவுக்கரசி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்பத்தின் மூத்தவராய் ரமேஷின் மகள் கோகிலா (16), தனது சகோதரர்கள் ஹரீஷ் (15), ராகவன் (14) ஆகியோரை தேற்றி ஆறுதல் கூறி வருகிறார். இவர்கள் முறையே பிளஸ் 1, 10, 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கையை இழந்த நிலையில்…: வண்ணம் தீட்டும் தொழிலாளியான ரமேஷ், சிறு வயதில் நிகழ்ந்த விபத்தில் வலது கையை இழந்த நிலையில், ஒரு கையைக் கொண்டு வேலை செய்து வந்தார். கணவரின் நிலையறிந்து, மனைவி வடிவுக்கரசி, கூலித்தொழில் செய்து வருமானம் ஈட்டி வந்தார். உயரமான கட்டடத்தில் நின்று வேலை பார்க்கும் போது பயத்தை மறைக்க சாராயம் குடிப்பாராம் ரமேஷ். அந்தப் பழக்கம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

குறைந்த விலையால்…: டாஸ்மாக்கில் கிடைக்கும் மதுவின் விலையைக் காட்டிலும் குறைவாக ரூ.60}க்கு பாக்கெட் சாராயம் கிடைப்பதால் அதை வாங்கி வைத்து ரமேஷ் குடிப்பாராம். கடந்த 19-ஆம் தேதி காலையில் வழக்கமாக குடிக்கும் தம்ளர் இல்லாமல், புதிய தம்ளரில் தான் வாங்கிவைத்திருந்த சாராயத்தைக் குடித்து விட்டு, அதில் மீதம் வைத்து விட்டு ரமேஷ் சென்றுவிட்டாராம்.

மூல நோயால் அவதிப்பட்டு வந்த வடிவுக்கரசி தம்ளரில் இருப்பது ஓம வாட்டர் எனக் கருதி அதைக் குடித்து விட்டாராம். சிறிது நேரத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் வடிவுக்கரசியும், ரமேஷும் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர்.

கண்ணீரில் தவிப்பு: ரமேஷின் மகள் கோகிலா கூறியதாவது: தந்தை, தாயின் தினசரி வருவாய் ரூ.700 ஆக இருந்தாலும், கடன்தொகை போகத்தான் குடும்பச் செலவுகளுக்கு பணம் கிடைக்கும். அந்த தொகையைக் கொண்டு எங்களைப் படிக்க வைத்தனர். தற்போது, ஒரே நேரத்தில் தாய், தந்தையை இழந்து நிர்க்கதியாய் மூவரும் நிற்கிறோம். இனி நாங்கள் எப்படி வாழ்வது என்பது தெரியவில்லை. எங்களைப் போல பல குடும்பங்களை கண்ணீர் சிந்தும் நிலைக்குத் தள்ளியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார்.

நிவாரண உதவித் தொகை ரூ.10 லட்சம், குழந்தைகளின் கல்விச் செலவு ஏற்பு, ரூ.5 லட்சம் வரை வைப்புத் தொகை எனப் பல்வேறு அறிவிப்புகள் அரசால் அளிக்கப்பட்டாலும், குடும்பத்தின் வாழ்வாதாரமாய் இருந்த பெற்றோரை ஒரே நேரத்தில் இழந்து மூன்று குழந்தைகளும் நிர்க்கதியாய் நிற்பது அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024