Saturday, September 21, 2024

கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானது அதிர்ச்சி அளிக்கிறது – கவர்னர் ஆர்.என்.ரவி

by rajtamil
0 comment 23 views
A+A-
Reset

கள்ளச்சாராய உயிரிழப்புகள் கவலைக்குரிய விஷயமாகும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அப்பகுதியை சோ்ந்த சிலா், அப்பகுதியில் விற்பனை செய்யப்படும் சாராயத்தை அருந்தியதாக கூறப்படுகிறது.

கள்ளச்சாராயம் குடித்த 80-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்.

நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்." என்று தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024