நியூயார்க்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோரை அந்த அமைப்பு பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
10 மாதங்களாக நடந்து வரும் மோதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 88 ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
காசாவில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. இந்நிலையில், நிவாரண உதவிகளுக்கான தங்களுடைய வாகனங்களில் ஒன்றின் மீது இஸ்ரேல் நாட்டின் படைகள் 10 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது என ஐ.நா. அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
இதில் வாகனத்தின் முன்பக்க கண்ணாடிகள் இலக்காக கொள்ளப்பட்டன. இஸ்ரேல் ராணுவத்தின் முழு ஒத்துழைப்புடன் இந்த வாகனம் சென்றுள்ளது. அதில், ஐ.நா. அமைப்புக்கான சின்னமும் குறிக்கப்பட்டு இருந்தது என ஐ.நா. அமைப்பு தெரிவித்து உள்ளது.
இதுபற்றி ஐ.நா. அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறும்போது, அந்த வாகனத்தில் இருந்த 2 ஊழியர்களுக்கு தாக்குதலில் காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறும்போது, குடிமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை தேவைகளான உணவு, நீர், புகலிடம் மற்றும் சுகாதார நலன் உள்ளிட்ட விசயங்களை வழங்குவதற்கான, சர்வதேச மனிதாபிமான சட்டத்தினை எல்லா தருணத்திலும் அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தி உள்ளார்.