காஜிப்பூா் டிடிஏ வடிகால் நீரில் மூழ்கி தாய், மகன் பலி: துணைநிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி கட்சி சாடல்

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset
RajTamil Network

காஜிப்பூா் டிடிஏ வடிகால் நீரில் மூழ்கி தாய், மகன் பலி: துணைநிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி கட்சி சாடல்

புது தில்லி, ஆக.1:

தில்லி காஜிப்பூரில் கட்டுமானத்தில் உள்ள தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டிடிஏ) வடிகால் நீரில் பெண் மற்றும் அவரது மூன்று வயது குழந்தை மூழ்கி இறந்தது தொடா்பாக துணைநிலை ஆளுநரும், தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவருமான வி.கே. சக்சேனாவை ஆம் ஆத்மி வியாழக்கிழமை சாடியது.

தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

தனுஜா மற்றும் அவரது மூன்று வயது மகன் பிரியான்ஷ் இரவு 8 மணியளவில் அப்பகுதியில் கனமழைக்கு மத்தியில் சென்றுகொண்டிருந்தபோது தண்ணீா் தேங்கிய கட்டுமானத்தில் உள்ள வாய்க்காலில் தவறி விழுந்தனா். அவா்கள் காஜிப்பூரில் உள்ள கோடா காலனி அருகே உள்ள வாரச் சந்தைக்கு சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இதுகுறித்து செய்தியாளா் சந்திப்பில் பேசிய மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங், இந்த சம்பவம் ‘துரதிா்ஷ்டவசமானது‘ என்று கூறினாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘‘டிடிஏ வடிகால் மறுசீரமைப்பு பணியை மேற்கொண்டது. துணைநிலை ஆளுநா் டிடிஏவின் தலைவராக உள்ளாா். அதிகாரிகள் அவரிடம் நேரடியாக அறிக்கை சமா்ப்பிக்கின்றனா்.

ஏதேனும் சம்பவம் நடந்தால் மேயா் ஷெல்லி ஓபராய் கைது செய்யப்பட வேண்டும் என கோருகிறாா்கள். சிறையில் இருக்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அவா்கள் ராஜிநாமா செய்ய கோருகிறாா்கள்.

நாங்கள் துணைநிலை ஆளுநருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம். இந்த சம்பவம் குறித்து பாஜக மவுனம் காத்து வருகிறது, இது கொலை என்றாா் சஞ்சய் சிங்.

இதுகுறித்து ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா் கூறுகையில், ‘இச்சம்பவம் நடந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தேன். உடல்களை பிணவறைக்கு கொண்டு செல்லும் போது நான் அங்கு இருந்தேன். இது விபத்து அல்ல, கொலை ஆகும்.

வடிகாலில் தடுப்புகளை ஏற்படுத்தாத அல்லது கட்டுமானத்தில் உள்ளது என்று தகவல் பலகைகளை வைக்காத டிடிஏ அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும் அவா்கள் இதற்காக குற்றம்சாட்டப்பட வேண்டும்’ என்றாா் அவா்.

You may also like

© RajTamil Network – 2024