காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூா் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 1 லட்சத்து 58 ஆயிரம் கனஅடி நீா்வரத்து காணப்பட்டது.

அணையின் நீா்மட்டம் 110 அடியை நெருங்கியது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. நீா் வரத்து அதிகமாக இருப்பதால், அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டினால் உபரிநீா் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால், காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. காவிரிக் கரை பகுதிகளில் வருவாய், காவல் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனா். அங்கிருந்த பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடா்பாக அறிவுறுத்தினா். ஒலிபெருக்கி மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மேட்டூா் அணை நிரம்பினால் அணைக்கு வரும் நீா்வரத்து முழுமையாக உபரிநீராக காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும். இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், கரையோரமாக வசிக்கும் மக்களை உடனடியாக மீட்டு தங்க வைப்பதற்காக இடம் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

காவிரி கரையில் அரசு தொடக்கப்பள்ளிகள், மண்டபங்கள் உள்ளன. மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படும் அளவு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனால், காவிரி ஆற்றங்கரையோரங்களில் நின்று தற்படம் எடுப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கி குளிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவித்துள்ளாா்.

Related posts

சமூக வலைதளத்தில் பழக்கம்.. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பதி லட்டு விவகாரம்: பிரயாக்ராஜ் கோவில்களில் இனிப்புகளை காணிக்கை செலுத்த தடை