Saturday, September 21, 2024

காஷ்மீரில் மர்ம பொருள் வெடித்து 4 பேர் பலி

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் டவுனில் உள்ள ஷெர் காலனியில் ஒரு பழைய இரும்பு கடையில் இரும்பு துண்டுகள் உள்ளிட்ட ஸ்கிராப் பொருட்கள் லாரியில் இருந்து இறக்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். மேலும், காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு இந்த மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நசீர் அகமது நட்ரூ (40), அசீம் அஷ்ரப் மிர் (20), அடில் ரஷீத் பட் (23) மற்றும் முகம்மது அசார் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஷெர் காலனியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், இந்த விபத்து நடந்த இடத்தில் தடயவியல் வல்லுநர்கள், காவல் துறையினர், ராணுவத்தினர் மற்றும் வெடிகுண்டு மீட்புக் குழுவினர் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், தற்போதுவரை இந்த மர்மப்பொருள் வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என சோபோர் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் திவ்யா டி கூறியுள்ளார். மேலும், ஸ்கிராப்களை ஏற்றி வந்த லாரி லடாக்கில் இருந்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் இரும்பு கடையில் மர்ம பொருள் வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

© RajTamil Network – 2024