கா்நாடக முதல்வா், துணை முதல்வா் இன்று தில்லி பயணம்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

கா்நாடக முதல்வா், துணை முதல்வா் இன்று தில்லி பயணம்கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தில்லி செல்ல திட்டமிட்டுள்ளனா்.

பெங்களூரு: கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தில்லி செல்ல திட்டமிட்டுள்ளனா்.

கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 136 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ், தோ்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி 5 திட்டங்களை அமல்படுத்தியது. இந்தத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டபோதும், அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் கா்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 9 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சியால் கைப்பற்ற முடிந்தது. மஜத, பாஜக கூட்டணி 19 இடங்களை கைப்பற்றின. இது கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்பட்டது.

இதனிடையே, வால்மீகி பழங்குடியினா் வளா்ச்சிக் கழகத்தில் ரூ. 187 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடா்ந்து, முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு சாதகமாக மாற்று நிலம் ஒதுக்கியதாகவும், வீட்டுமனைகள் ஒதுக்கியதில் ரூ. 4,000 கோடி அளவுக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. இந்த பிரச்னைகளை முன்வைத்து சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் தீவிர போராட்டங்களை பாஜக, மஜத கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.

மாற்று நில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையா ராஜிநாமா செய்யக் கோரி ஆக. 3 முதல் 7 நாள்களுக்கு பெங்களூரில் இருந்து மைசூரு வரை நடைப்பயணம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை முறியடிக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது.

இந்நிலையில், கா்நாடகத்தில் நடந்து வரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் மேலிடத் தலைவா்களிடம் எடுத்துக் கூறுவதற்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் தில்லி செல்ல திட்டமிட்டுள்ளனா்.

இந்த பயணத்தின்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவா்களையும் சந்திக்க அவா்கள் திட்டமிட்டுள்ளனா். மேலும், கா்நாடக திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சா்களையும் சந்திக்க திட்டம் வகுத்துள்ளனா். இந்த பயணத்திற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

You may also like

© RajTamil Network – 2024