கிங்ஸ் கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் ரொனால்டோ அணி தோல்வி

by rajtamil
Published: Updated: 0 comment 33 views
A+A-
Reset

கிங்ஸ் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அல் நாசர் – அல் ஹிலால் அணிகள் மோதின.

ஜெட்டா,

49-வது கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் அல் நாசர் – அல் ஹிலால் அணிகள் மோதின. அல் நாசர் அணியில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கம் வகித்ததால் அந்த அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. அல் ஹிலால் தரப்பில் அலெக்சாண்டர் மெட்ரோவிச் 7-வது நிமிடத்திலும், அல் நாசர் தரப்பில் அய்மான் யாஹா 88-வது நிமிடத்திலும் கோலடித்தனர். இதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் (30 நிமிடம்) இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் சமநிலை நீடித்தது. இதைத்தொடர்ந்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அல் ஹிலால் அணி 5-4 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் அல் நாசர் அணியின் கோல் கீப்பர் டேவிட் ஆஸ்பினா 56-வது நிமிடத்தில் கோல் எல்லைப்பகுதிக்கு வெளியே பந்தை கையால் கையாண்டதால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதேபோல் அல் ஹிலால் அணி வீரர்கள் அலி அல் புலாஹி 86-வது நிமிடத்திலும், காலிடோ கோலிபாலி 91-வது நிமிடத்திலும் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை எச்சரிக்கைக்கு ஆளாகி நடையை கட்டினர். தான் ஆடிய அணி தோல்வியை சந்தித்ததால் ரொனால்டோ கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

You may also like

© RajTamil Network – 2024