கிராமப்புற இந்தியாவுக்கு பிரதமர் மோடி செய்த துரோகத்தின் நினைவுச்சின்னம் 100 நாள் வேலை திட்டம்: கார்கே

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

புதுடெல்லி,

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

"2005ம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்டு 23) அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் கோடிக்கணக்கான கிராமப்புற மக்களின் வேலை உரிமையை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.

தற்போது, இத்திட்டத்தின் கீழ் 13.3 கோடி பேர் வேலை செய்கின்றனர். குறைந்த ஊதியம், நிச்சயமற்ற வேலை நாட்கள், வேலை அட்டை திடீரென காரணமின்றி ரத்தாவது எனப் பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக்கின்றனர். தொழில்நுட்ப பயன்பாடு, ஆதார் எனப் பல்வேறு காரணங்களைக் காட்டி மோடி அரசு 7 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை உரிமை அட்டைகளை ரத்து செய்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு மொத்தமாக வெறும் 1.78 சதவீதம் மட்டுமே. இது கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டத்துக்கான மிகக் குறைந்த ஒதுக்கீடு ஆகும். குறைந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆர்வம் காட்டுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என உறுதிப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.

அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் ஏற்கெனவே வெளியான பொருளாதார ஆய்வறிக்கையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான கோரிக்கையை கிராமப்புற துயரத்துடன் தொடர்புபடுத்த வேண்டிய அவசியமில்லை என்றுகூறி, குறைந்த ஒதுக்கீட்டை நியாயப்படுத்த அடித்தளத்தை அமைத்துள்ளது.

ஆனால், அண்மையில் நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கையில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தினக்கூலி போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. உதாரணத்துக்கு இந்தத் திட்டத்தின் கீழ் உத்தரபிரதேசத்துக்கான தினக்கூலி 2014-ல் இருந்து இப்போதுவரை வெறும் 4 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் பணவீக்கம் பலமடங்கு அதிகரித்துவிட்டது.

இப்போதைய நிலவரப்படி இத்திட்டத்தின் கீழ் ஒருவர் தினக்கூலியாக ஒரு நாளைக்கு ரூ.213 மட்டுமே பெறுகிறார். காங்கிரஸ் அன்றாட கூலியாக ரூ.400 வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

கடந்த 13 மாதங்களாக தொடர்ச்சியாக நகர்ப்புற பணவீக்கத்தை ஒப்பிடுகையில் கிராமப்புற பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முடக்குவதன் மூலம் கிராமப்புற ஏழைகள் மீதான மோடி அரசின் அக்கறையின்மை தொடர்கிறது.

100 நாள் வேலைத் திட்டத்தின் தற்போதைய அவல நிலை கிராமப்புற இந்தியாவுக்கு மோடி செய்யும் துரோகத்தின் வாழும் நினைவுச்சின்னமாக திகழ்கிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

In 2005, on this day, our Congress-UPA Govt enacted Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) to ensure 'Right to Work' to crores of people in rural India. Presently, there are 13.3 Cr active workers who depend on MGNREGA, despite low wages, abysmal… pic.twitter.com/VC5dpoMUUi

— Mallikarjun Kharge (@kharge) August 23, 2024

You may also like

© RajTamil Network – 2024