Thursday, October 17, 2024

கிருஷ்ணகிரி அணை நீர்வரத்து 3,428 கனஅடியாக அதிகரிப்பு: 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset

கிருஷ்ணகிரி அணை நீர்வரத்து 3,428 கனஅடியாக அதிகரிப்பு: 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 3428 கனஅடியாக அதிகரித்த நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 2680 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையாலும், கெலவரப்பள்ளி அணையில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இன்று(16-ம் தேதி) காலை 8 மணிக்கு விநாடிக்கு 1714 கனஅடியாக இருந்த நீர்வரத்து மதியம் 12 மணியளவில் 3428 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.40 அடியாக இருந்ததால், அணையில் இருந்து விநாடிக்கு 2680 கனஅடி தண்ணீர், 3 மணல் போக்கி சிறிய மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் சீறி பாய்ந்து செல்லும் தண்ணீர், அணை பூங்காவிற்கு செல்லும் தரைப்பாலத்தை மூழ்கியபடி செல்கிறது.

இதன் காரணமாக, தரைப்பாலம் வழியாக பூங்காவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தின் இருபகுதிகளிலும், யாரும் உள்ளே செல்லாத வகையில் போலீஸார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்பெண்ணை ஆறு கடந்து செல்லும் காவேரிப்பட்டணம், பென்னேஸ்வர மடம், நெடுங்கல் உட்பட செல்லும் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தொடர்புடைய ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் வரை 3 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே இன்று(16-ம் தேதி) கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ஆட்சியர் கே.எம்.சரயு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறும்போது, “தென்பெண்ணை ஆற்றங்கரையோர பொதுமக்கள் ஆறு மற்றும் நீர்நிலைகளை கடக்கவோ, கால்நடைகளை ஆற்று பகுதிகளுக்கு கொண்டு செல்லவோ கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, பாரூர் பெரிய ஏரி உள்ளிட்ட 6 இடங்களில் மணல் மூட்டைகள் தயார் நிலையிலும், கிருஷ்ணகிரி அணையில் மட்டும் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024