கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுமை செய்த குற்றவாளி மரணம்: தந்தையும் இறந்ததால் தலைவர்கள் சந்தேகம்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுமை செய்த குற்றவாளி மரணம்: தந்தையும் இறந்ததால் தலைவர்கள் சந்தேகம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிவராமன், ஏற்கெனவே எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்து அவரது தந்தையும் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த முகாமில்கலந்துகொண்ட 12 வயது மாணவியை, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறைமாவட்ட தலைவராக இருந்த சிவராமன் (35) என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். மேலும் 13 மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மாணவி கொடுத்த புகாரின்பேரில், பர்கூர் மகளிர் போலீஸார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து, சிவராமன் மற்றும் பள்ளி முதல்வர், தாளாளர், 2 ஆசிரியர்கள், போலி பயிற்சியாளர்கள் உட்பட 10 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்படுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சிவராமன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

சிவராமனை கடந்த 19-ம் தேதி அதிகாலை போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது தப்ப முயன்றபோது சிவராமன் கால் முறிந்தது. போலீஸார் அவரை கைது செய்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஓரிரு நாட்களுக்கு முன்பு, எலிக்குவைக்கப்படும் மருந்து பசையை தின்றுதற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இந்த நிலையில், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த 21-ம் தேதி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் உயிரிழந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்கெனவே கடந்த ஜூலை 9-ம் தேதியும் இதேபோல எலி மருந்து சாப்பிட்டுள்ளார். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் (22-ம் தேதி) இரவு 10.15 மணி அளவில், சிவராமனின் தந்தை அசோக்குமார் (61),தனது இருசக்கர வாகனத்தில் திம்மாபுரத்தில இருந்து காவேரிப்பட்டணம் நோக்கிசென்றுள்ளார். தேர்பட்டி என்ற இடத்தில்நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார்.

சிவராமன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, நேற்று மாலை 5.30 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சிவராமன், அவரது தந்தை அசோக்குமாரின் உடல்கள், பூர்வீக கிராமமான ஜெகதேவியில் அடக்கம் செய்யப்பட்டன. காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த சிவராமனுக்கு மனைவி, 3 வயதில்ஒரு பெண் குழந்தை உள்ளது.

திடீரென அடுத்தடுத்து நடந்த தந்தை -மகன் மரணம் தொடர்பாக அரசியல்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். தவறான செய்தி பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை எச்சரித்துள்ளார்.

போலி முகாம் நடந்த பள்ளி, கல்லூரிகளில் நேற்று 2-வது நாளாக, ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வுகுழு மற்றும் சமூகநலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழு விசாரணை நடத்தியது.

விசாரணை நடத்த அதிமுக, பாஜக, காங்கிரஸ் வலியுறுத்தல்: பாலியல் விவகாரத்தில் முழு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருமாறு அதிமுக பொதுச் செயலாளர்பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளனர்.

‘தந்தை – மகன் தொடர் மரணங்கள் சந்தேகத்துக்கிடமாக உள்ளன. பாலியல் குற்றத்தில் தொடர்பு உடைய முக்கிய புள்ளிகளின் பெயர்களை சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் சிவராமன் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்பு உடைய அனைவரும் கைது செய்யப்பட்டனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, இருவரது மரணங்கள் நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. சிறப்பு புலனாய்வு குழு இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும்’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதிபி.பி.பாலாஜி அமர்வில் காங்கிரஸ் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் நேற்று முறையிட்டார். இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024