Wednesday, November 6, 2024

கிருஷ்ணகிரி பாலியல் அத்துமீறல் வழக்கில் கைதான போலி என்சிசி பயிற்சியாளர் மீது பண மோசடி புகார்!

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

கிருஷ்ணகிரி பாலியல் அத்துமீறல் வழக்கில் கைதான போலி என்சிசி பயிற்சியாளர் மீது பண மோசடி புகார்!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் போலி பயிற்சி முகாம் நடத்தி, 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவராமன், தன்னை வழக்கறிஞர் எனக் கூறிக்கொண்டு ரூ.36 லட்சம் பணம் பறித்ததாக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி 12 வயதுடைய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், போலி என்சிசி பயிற்சியாளருமான சிவராமன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சிவராமன் தன்னை வழக்கறிஞர் என அடையாளப்படுத்திக் கொண்டு ரூ.36 லட்சம் மோசடி செய்துள்ளதாக, ஒரு குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்று (ஆக.21) கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் கொண்டேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(31), மோகன்(27), சாந்தி(52), நாராயணன்(49), மஞ்சுளா(40), கோவிந்தசாமி(39) மற்றும் சந்திரா(34) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: “கிருஷ்ணகிரி அருகே பெத்தாளப்பள்ளி கிராமத்தில் சர்வே எண் 127/4 உள்ள எங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்து உள்ளது. இந்த சொத்தை முனியப்பன் என்பவர் போலியான கிரையப் பத்திரம் செய்து, எங்களை ஏமாற்றி சுவாதீனத்தில் வைத்துள்ளார்.

போலி நீதிமன்ற உத்தரவு மற்றும் போலி வங்கி ரசீதுகள்

இந்நிலையில், காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம், காந்திநகரை சேர்ந்த அசோக்குமார் என்பவரது மகன் சிவராமன்(30) என்பவர், தன்னை வழக்கறிஞர் என அறிமுகம் செய்து கொண்டு, எங்களுக்கு பாத்தியப்பட்ட சொத்தை மீட்டு தருவதாக கூறினார். பின்னர், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவு என போலியாக ஒரு ஆணையை தயார் செய்து, அதில், நிலம் மீட்பு தொகையாக ரூ.34 லட்சம் கட்ட வேண்டும் எனவும், தற்போது நிலம் மீட்பு முன்தொகையாக தாங்கள் அரசுக்கு ரூ.20 லட்சம் தொகையை வங்கியில் செலுத்த வேண்டும் என இடம் பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து சக்திவேலிடம் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம், மோகன் என்பவரிடம் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம், சாந்தி என்பவரிடம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம், நாராயணன் என்பவரிடம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம், கோவிந்தசாமி என்பவரிடம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம், மற்றும் வழக்கறிஞர் கட்டணமாக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் என மொத்தம் ரூ.36 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை சிவராமன் பெற்றார். தொடர்ந்து, இந்த பணத்தை, நீதிமன்ற வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாக போலியாக வங்கி ரசீதுகளை காண்பித்தார்.

நிலத்தை மீட்டு தருவதாக கூறி கிருஷ்ணகிரி அருகே உள்ள கொண்டேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பணத்தை பெற்ற சிவராமன்

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது அலுவலகத்துக்கு சென்ற போது, பூட்டப்பட்டிருந்தது. அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது, தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவராமன், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. எனவே, சிவராமன் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து, பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024