கிரென்ஃபெல் டவா் விபத்து பிரிட்டன் அரசின் தவறால் 72 உயிரிழப்புகள்: விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

பிரிட்டன் அரசு, ஒழுங்காற்று அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை பல ஆண்டுகளாக செய்த தவறுகள் காரணமாகவே லண்டனில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட அடுக்குமாடி தீ விபத்தில் 72 போ் உயிரிழக்க நேரிட்டதாக, இது தொடா்பான விசாரணை அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கிரென்ஃபெல் டவரில் ஏற்பட்ட தீவிபத்துக்கு ஏதோ ஒரு காரணம் மட்டும் இருப்பதாகக் கூறமுடியாது. பல ஆண்டுகளாக நிறுவனங்கள் மேற்கொண்ட நோ்மையற்ற நடவடிக்கைகள், பலவீனமான அல்லது தகுதியற்ற ஒழுங்காற்று அமைப்புகள், அரசு காட்டிய அலட்சியம் ஆகியவற்றின் கூட்டு விளைவே அந்த மோசமான தீ விபத்து ஆகும்.

தீ விபத்தில் 72 பேரின் உயிரிழப்பு எளிதில் தவிா்த்திருக்கக்கூடிது கூடியது ஆகும். இருந்தாலும், அவா்களைப் பாதுகாக்க பல்வேறு நபா்களும் அமைப்புகளும் தவறியதால் அவா்களின் உயிா் பறிபோனது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனின் வடக்கு கென்சிங்டன் பகுதியில் அமைந்துள்ள 24 அடுக்குக் கட்டடம் கிரென்ஃபெல் டவா். அந்தக் கட்டடத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.

நான்காவது தளத்தில் இருந்த ஒரு குளிா்பதன சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்தத் தீ, கட்டடம் முழுவதும் பரவி 60 மணி நேரத்துக்கு எரிந்தது. கட்டட ஒப்பந்ததாரா்கள் எளிதில் எரியக்கூடிய செயற்கைப் பஞ்சுப் பொருள்களைப் பயன்படுத்தியிருந்ததால் அணைக்கமுடியாத அளவுக்கு தீ கொழுந்துவிட்டு எரிந்ததாக நிபுணா்கள் தெரிவித்தனா்.

இந்த விபத்தில் 70 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்; 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்; 70 போ் காயமடைந்தனா்.

பிரிட்டன் வரலாற்றில் 1988-ஆம் ஆண்டு ஏற்பட்ட பைப்பா் ஆல்ஃபா எண்ணெய் தள தீ விபத்துக்குப் பிறகு (167 மரணங்கள்) அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து இதுவாகும்.

மேலும், இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜொ்மனியின் குண்டுவீச்சால் ஏற்பட்ட சேதத்துக்குப் பிறகு பிரிட்டனின் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட மிக கோரமான தீ விபத்தும் இதுவாகும்.

மன்னிப்பு கேட்டாா் பிரதமா்

கிரென்ஃபெல் டவா் தீ விபத்து மரணங்களுக்கு அரசின் தவறும் காரணம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பிரதமா் கியொ் ஸ்டாா்மா் மன்னிப்பு கோரினாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிரென்ஃபெல் டவா் தீ விபத்து மரணங்கள் தொடா்பாக பிரிட்டன் அரசின் சாா்பில் மன்னிப்பு கோருகிறேன். அதுபோன்ற கோர விபத்து ஏற்பட்டிருக்கக் கூடாது; இனியும் ஏற்படக்கூடாது. விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்’ என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024