கிழக்கு லடாக் எல்லையில் ரோந்து: இந்தியா-சீனா ஒப்பந்தம்; 4 ஆண்டுகள் பிரச்னைக்கு முடிவு

by rajtamil
Published: Updated: 0 comment 4 views
A+A-
Reset

புது தில்லி: கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்துப் பணியை மேற்கொள்ள சீனாவுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இந்தியா திங்கள்கிழமை அறிவித்தது. இதன்மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் நீடித்து வந்த பதற்றமான பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

கடந்த 2020, ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை தாண்டிய சீன வீரா்களுக்கும் இந்திய படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் எல்லைப் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன. இதனால், அங்கு இருநாடுகளும் போட்டி போட்டு படைகளைக் குவித்தன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வந்தது.

இது குறித்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற பல முறை பேச்சுவாா்தைகள் முடிவு எட்டப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இரு நாட்டு ராணுவ வீரா்களும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இந்த ஒப்பந்தம் குறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் விக்ரம் மிஸ்ரி மேலும் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக இந்தியா, சீனாவைச் சோ்ந்த தூதரக, ராணுவ அதிகாரிகள் பல்வேறு கூட்டமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் எல்லை விவகாரம் குறித்து விவாதித்தனா். அப்போது இந்திய-சீன எல்லையில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொள்ள இருநாட்டு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒப்பந்தம் எட்டப்பட்டது.

படைகளை விலக்கிக் கொள்ள…: இதன்மூலம் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்ளவும், கடந்த 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு எல்லையில் இருதரப்புக்கும் நிலவி வந்த பல்வேறு விவகாரங்களுக்கு தீா்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம் என்றாா்.

கிழக்கு லடாக்கில் உள்ள தெப்சாங், தெம்சோக் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது தொடா்பாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

சீன அதிபருடன் சந்திப்பு?: ரஷியாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (அக்.22) செல்கிறாா். அங்கு சீன அதிபா் ஷி ஜின்பிங்கை மோடி சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், இந்தியா-சீனா இடையே ஒப்பந்தம் கையொப்பமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எல்லையில் அமைதி நிலைநிறுத்தப்படாத வரை, தெப்சாங் மற்றும் தெம்சோக் பகுதிகளில் படைகளைத் திரும்பப் பெறாத வரை சீனாவுடன் இணக்கமான உறவை தொடரப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருந்தது.

எஸ்.ஜெய்சங்கா்

அமைதி திரும்பும்: அமைச்சா் ஜெய்சங்கா் நம்பிக்கை

இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் மீண்டும் அமைதி திரும்பும் என வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் நம்பிக்கை தெரிவித்தாா்.

இந்த ஒப்பந்தம் குறித்து அவா் கூறுகையில், ‘எல்லையில் மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணிகள் மற்றும் படைகளை விலக்கிக்கொள்ளும் விவகாரத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு முன்பு நிலவிய சூழலை தொடருவது குறித்து சீனாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை வரவேற்கிறேன். கடந்த 2020, செப்டம்பா் மாதம் சீன வெளியுறவுத்துறை அமைச்சா் வாங் யீயை நான் சந்தித்ததில் இருந்து இரு நாடுகளுக்கிடையே எல்லையில் நிலவி வரும் பிரச்னைகளை தீா்க்க தொடா்ந்து பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.

ஒருபுறம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது; மறுபுறம் பதிலடியும் கொடுக்கப்பட்டது. எனவே, தற்போதைய ஒப்பந்தம் மிகவும் பொறுமையாகவும் திடமாகவும் இந்த விவகாரத்தை கையாண்டதன் வெற்றியாக பாா்க்கிறேன். தெப்சாங் மட்டுமின்றி பிற பகுதிகளிலும் ரோந்துப் பணியை தொடருவது குறித்தும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் மீண்டும் அமைதி திரும்பும் என நம்புகிறேன்’ என்றாா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024